பொது செய்தி

தமிழ்நாடு

'ஹால்மார்க்' முத்திரை தாமதம் தங்க நகைகள் விற்பனை பாதிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
இந்தியாவில், தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' தரக்குறியீடு, ஜூலை 1 முதல் கட்டாயமாகி உள்ளது. ஆனால், போதிய தர நிர்ணய மையங்கள் இல்லாததால், நகைக் கடைக்காரர்களால், நகைகளை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இது தொடர்பாக, தங்கம் மற்றும் வைரம் நகை விற்பனையாளர் சங்க செயலர் சாந்தகுமார் அளித்த பேட்டி:மத்திய அரசு, தங்க நகைகளுக்கு

இந்தியாவில், தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' தரக்குறியீடு, ஜூலை 1 முதல் கட்டாயமாகி உள்ளது. ஆனால், போதிய தர நிர்ணய மையங்கள் இல்லாததால், நகைக் கடைக்காரர்களால், நகைகளை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தங்கம் மற்றும் வைரம் நகை விற்பனையாளர் சங்க செயலர் சாந்தகுமார் அளித்த பேட்டி:மத்திய அரசு, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரையை வலியுறுத்துவதற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நாங்கள் ஹால்மார்க்கை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.ஹால்மார்க் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், தர முத்திரையை வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைய சொல்கிறோம்.

ஹால்மார்க் என்பது, ஆறு இலக்க 'ஆல்பா நியூமரிக்கல்' எண். அதற்கு 'ஹால்மார்க் யூனிக் ஐ.டி.,' என்று பெயர். அதாவது, ஒவ்வோர் ஆபரணத்துக்கும் தனித்தனி முத்திரை வழங்கப் படும். அதை, தர நிர்ணய மையங்கள், ஆபரணத்தின் பின் பகுதியில் முத்திரை இட்டுத் தரும். முன்பெல்லாம் 24 மணி நேரத்தில் முத்திரை கிடைத்து விடும்.

தற்போது, நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நகைகளை செய்து, ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்பி, அங்கே முத்திரை இடப்பட்டு திரும்ப வருவதற்குள், எங்கள் விற்பனை மற்றும் நிதி சுழற்சி பாதிக்கப்படுகிறது. ஒரே நாளில் முத்திரை கிடைத்து விட்டால், அந்த நகை மாடல்கள், உடனடியாக எங்கள் 'ஷோரூம்'களுக்கு வந்து, விற்பனை கூட ஆகலாம். ஒரு நீண்ட தங்க சங்கிலி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வாடிக்கையாளர், அதன் நீளத்தைக் குறைக்க சொல்கிறார் என்றால், முன்பெல்லாம் அதை குறைத்துத் தந்து, அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்வோம். ஹால்மார்க் வந்த பின், இது முடியவில்லை. ஏனெனில், முதலில் என்ன நீளம், என்ன எடை இருக்கிறதோ, அந்த விபரங்களைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை தான், அந்த சங்கிலியில் இருக்கும். நீளத்தையும், எடையையும் மாற்றினால், மீண்டும் ஹால்மார்க் மையத்துக்கு அனுப்பி வைத்து, மீண்டும் புதிய அடையாள குறியீட்டை பெற வேண்டும்.

அதேபோல், பலர் கடைசி நேரத்தில் வந்து நகை வாங்குவர்.திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வந்து, திருமாங்கல்யம் செய்யச் சொல்வர். அந்த உருப்படியை, மூன்று நாட்களுக்குள் செய்து விட்டாலும், ஹால்மார்க் தர நிர்ணயத்துக்காக, இன்னும் நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் ஒரே பதற்றமாக இருக்கும்.

இன்னொரு பயமும் உள்ளது. சிறு கடைக்காரர்கள் 1 கிலோ முதல் 3 கிலோ நகைகள் வரை, ஹால்மார்க் தர முத்திரை மையங்களுக்கு அனுப்பி வைப்பர். பெரிய நிறுவனங்களோ 10 கிலோ நகைகள் வரை அனுப்புவர். இதுபோல், பத்து நிறுவனங்கள் அனுப்பி வைத்தால், மையங்களில் 100 கிலோ தங்கம் தேங்கி விடும். அவர்களிடம், இந்த நகைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு, பாதுகாப்பு இருக்குமா என்ற, பயம் ஆட்டிப் படைக்கும்.

எங்கள் எதிர்பார்ப்பு எளிமையானது. ஹால்மார்க் தர முத்திரை மையங்களை அதிகப்படுத்துங்கள். முத்திரை பெறுவதற்கான, கால அவகாசத்தை குறைத்துத் தாருங்கள் என்பதே.இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, ஹால்மார்க் தர முத்திரை வழங்கும், இந்திய தர நிர்ணய ஆணையத் தரப்பில் கூறியதாவது:தர நிர்ணய மையங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளில், அதன் எண்ணிக்கை, இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 28 மையங்களும், தமிழகம் முழுதும் 103 மையங்களும் உள்ளன. ஏராளமான நிறுவனங்கள், புதிய மையங்களை துவங்க விண்ணப்பித்து வருகின்றன. அதேபோல், தங்க ஆபரணத்துக்கு ஹால்மார்க் தர முத்திரை பெற, நான்கு நாட்கள் ஆகிறது என்பது பழைய நிலை. தற்போது, விரைந்து வழங்கப்படுகிறது.இவ்வாறு ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X