அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்ய முடிவு

Added : ஆக 19, 2021
Share
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - பரந்தாமன்: சென்னை, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட, கே.பி., பூங்கா பகுதியில், கடந்த ஆண்டு, 864 குடியிருப்புகள் 112.60 கோடி ரூபாயில் கட்டப்பட்டன. ஒன்பது மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணி, 2018 ஜன., 19ல் துவக்கப்பட்டு 2019 மே, 18ல் முடிக்கப்பட்டது. அதேபோல இரண்டாவது அலகில், 1,056 குடியிருப்புகள் 139.13 கோடி ரூபாய் மதிப்பில், ஒரே ஆண்டில் கட்டி

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - பரந்தாமன்:

சென்னை, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட, கே.பி., பூங்கா பகுதியில், கடந்த ஆண்டு, 864 குடியிருப்புகள் 112.60 கோடி ரூபாயில் கட்டப்பட்டன. ஒன்பது மாடி கட்டடத்தின் கட்டுமானப் பணி, 2018 ஜன., 19ல் துவக்கப்பட்டு 2019 மே, 18ல் முடிக்கப்பட்டது. அதேபோல இரண்டாவது அலகில், 1,056 குடியிருப்புகள் 139.13 கோடி ரூபாய் மதிப்பில், ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தொட்டால் உதிரும் சிமென்டை, அ.தி.மு.க., அரசு கண்டுபிடித்துள்ளது. பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட, அரசு கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற கட்டடங்களை கட்டி உள்ளதால், துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் மீது 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்:

சென்னை, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட, புளியந்தோப்பு கேசவ பிள்ளை திட்டப் பகுதியில், 1978ல் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் 864 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளன. அவற்றை அகற்றி விட்டு, மறு கட்டுமானம் செய்ய 2016 அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டது.அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஒன்பது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் 112.60 கோடி ரூபாய் செலவில் 2018ல் துவக்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது.

2020 மே முதல் 2021 மார்ச் வரை, கொரோனா சிகிச்சை மையமாக பயன்பாட்டில் இருந்தது. அங்கு குடியிருந்த மக்கள், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வழங்கும்படி கோரினர். அதன் அடிப்படையில், நேரில் சென்று ஆய்வு செய்தோம். அடையாளம் தெரியாத நபர்களால், குடிநீர், கழிவு நீர் குழாய் இணைப்புகள் சேதமாக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி செய்ய, அலுவலர்களுக்கு உத்தரவிட்டோம். உடனடியாக சரி செய்யப்பட்டன.

ஆடி மாதம் முடிந்ததும், குடியிருப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டது. கடந்த மாதம் மழை பெய்த போது, தற்காலிக குடியிருப்புகளில் இருந்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். இந்நிலையில், கட்டடம் சரியில்லை என தகவல் வெளியானதும், கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அறிக்கையில், கட்டுமான பணியில் தவறு இருப்பது தெரிய வந்தால், ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல, தமிழகம் முழுதும் 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்து, ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை தர கட்டுப்பாட்டு குழு ஆய்வு செய்து, அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.யார் தவறு செய்தாலும், அரசு வேடிக்கை பார்க்காது. அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரும் பாரபட்சம் பார்க்க மாட்டார். அரசு அதிகாரியாக இருந்தாலும், ஒப்பந்ததாரராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X