அன்று அம்மன் குளம்; இன்று புளியந்தோப்பு! குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு விடியல் எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அன்று அம்மன் குளம்; இன்று புளியந்தோப்பு! குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு விடியல் எப்போது?

Added : ஆக 20, 2021
Share
சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு முறைகேடு குறைத்து, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில், அடுத்தடுத்து தொடர்ந்து இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, குடிசை மாற்று வாரிய வீடுகளை, தரக்குறைவாக தான் கட்ட வேண்டும் என, ஆட்சிக்கு வரும் கழகங்கள் முடிவு செய்து

சென்னை புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு முறைகேடு குறைத்து, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில், அடுத்தடுத்து தொடர்ந்து இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, குடிசை மாற்று வாரிய வீடுகளை, தரக்குறைவாக தான் கட்ட வேண்டும் என, ஆட்சிக்கு வரும் கழகங்கள் முடிவு செய்து விட்டதோ என, மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தொழில்நுட்பம்தமிழகத்தில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு, மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்க வேண்டும் என்பதற்காக, 1971ல் குடிசை மாற்று வாரியம் துவக்கப்பட்டது. வாரியத்தின் வாயிலாக, இதுவரை, 4 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த வீடுகள், கட்டுமான தொழில்நுட்ப அடிப்படையில், குறைந்தபட்சம், 50 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டும். ஆனால், இந்த வீடுகள், 30 ஆண்டுகளை கடந்ததே இல்லை.936 வீடுகள்கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சி காலத்தில், கோவை மாவட்டம், அம்மன் குளம் பகுதி யில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக, 936 வீடுகள் கட்டப்பட்டன. அதன்பின், 2011 தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.இந்நிலையில், 2012ல் கட்டுமான பணிகள் முடியும் நிலையில், அம்மன் குளம் திட்டத்தில், 48 வீடுகள் அடங்கிய கட்டடம் நிலத்தில் புதைந்தது. அப்போது, இந்த விவகாரம் தி.மு.க., மீது பெரிய புகாராக தெரிவிக்கப்பட்டு, அரசியல் ரீதியாக சர்ச்சையானது.முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஐ.ஐ.டி., வல்லுனர்கள் ஆய்வுக்கு உத்தரவிட்டதுடன், குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றினார்.

இதைஅடுத்து, அம்மன் குளம் திட்டம் மாற்றி அமைக்கப் பட்டது.குற்றச்சாட்டுதற்போது, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி. தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில், சுவர் பூச்சுக்கள் உதிர்வது சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் அன்பரசன், ஐ.ஐ.டி., வல்லுனர்கள் ஆய்வுக்கு உத்தரவிட்டு உள்ளார்.அதிகாரிகள், ஒப்பந்ததாரர், வீட்டுவசதி துறை முன்னாள் அமைச்சர் ஆகியோர் மீது, தி.மு.க.,வினர் புகார் கூறுகின்றனர். ஆனால், இதற்கு பொறுப்பான குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒருவர் மீது கூட, நடவடிக்கைக்கு உத்தரவிடப்படவில்லை.அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மட்டுமே மாறாத ஒன்றாக உள்ளது.அதிகாரிகளும் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் வரிப் பணத்தை சுரண்டி கொள்ளையடிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர். இத்தகைய திட்டங்களில், ஒப்பந்ததாரரின் தவறுகளுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வரும் கழகங்கள் மாறினாலும், கட்டட குறைபாடுகளும், முறைகேடுகளும் மாறுவதில்லை என்பதே கசப்பான உண்மை. மோசடி நடப்பது எப்படி?இதுகுறித்து, கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது:அரசு கட்டடங்களில் பூச்சு வேலை உள்ளிட்ட சில பணிகளுக்கு, ஆற்று மணல் தான் பயன்படுத்த வேண்டும் என்று, ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.ஆனால், தரமான ஆற்று மணல் பயன்படுத்தினால் செலவு அதிகமாகும் என்பதால், ஒப்பந்ததாரர்கள் கட்டு வேலைக்கான, 'எம் - சாண்ட்' பயன்படுத்துகின்றனர்.பூச்சு வேலைக்கு உயர் தர எம் சாண்ட் பயன்படுத்துவது நடைமுறையில் இருந்தாலும், அதற்கு கூடுதல் செலவு ஏற்படும். ஆனால், கட்டு வேலைக்கான, எம் சாண்டை ஒப்பந்ததாரர்கள் பூச்சு வேலைக்கு பயன்படுத்துவது தொடர்கிறது.அதே சமயம், பணி முடிந்து ரசீதுகள் கொடுக்கும் போது, ஆற்று மணல் பயன்படுத்தியதாக போலி ரசீதுகள் அளித்து மோசடி செய்கின்றனர். கட்டுமான நிலையில் வாரிய அதிகாரிகள் கண்காணிக்காமல், இந்த மோசடிக்கு துணையாக இருக்கின்றனர்.ஆற்று மணல் சிக்கல் எழுந்தது முதல், கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்தால், பல அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சிக்குவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X