கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:'குற்றப் பத்திரிகை தாக்கலின் போது, ஒருவரை கைது செய்தே தீர வேண்டும் என்பது கட்டாயமல்ல' என, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்த வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச

புதுடில்லி:'குற்றப் பத்திரிகை தாக்கலின் போது, ஒருவரை கைது செய்தே தீர வேண்டும் என்பது கட்டாயமல்ல' என, ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்த வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு:குற்றஞ்சாட்டப்பட்டவர், சாட்சிகளை கலைப்பார் அல்லது தப்பியோடி விடுவார் என, விசாரணை அதிகாரி கருதாத வரை, அவரை கைது செய்ய வேண்டியது அவசியமில்லை.குற்றவியல் தண்டனைச் சட்டம் 170வது பிரிவில், 'காவல்' என்ற சொல் உள்ளதே தவிர, அது நீதிமன்றம் அல்லது போலீஸ் காவலை குறிக்கவில்லை. அச்சொல், விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராக வேண்டும் என்பதையே குறிக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தில், தனி நபரின் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. ஒருவர் கடுமையான குற்றம் புரிந்திருந்தால் அல்லது காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தால் அல்லது குற்றவாளி சாட்சிகளை கலைக்கவோ அல்லது தப்பி ஓடவோ வாய்ப்பு இருக்கும் போது தான், அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்த வழக்கில், மனுதாரர் ஏழு ஆண்டுகளுக்கு முன் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்காக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற கைது நடவடிக்கைகள், ஒருவரின் சுய கவுரவத்தையும், மதிப்பையும் பாதிக்கும். எனவே, முன்ஜாமின் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X