பெங்களூரு:பெங்களூரு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளின்போது, அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் புகுவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள், மாநகரம் முழுவதும் பல பகுதிகளில் நடக்கிறது.சுரங்கப்பாதை அமைப்பதற்கு இயந்திரத்தில் தரைதளத்தை தோண்டும் போது, பாதாள சாக்கடை குழாய்கள் பாதிக்கப்பட்டு கழிவுநீர் வீடுகளில் நுழைந்துவிடுகிறது.சிவாஜி நகர் பகுதியில் தொடர்ந்து இரண்டு வீடுகளில் கழிவுநீர் புகுந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வீணாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:திடீரென இரவில், கழிவுநீர் வீட்டில் புகுந்து தேங்கி விட்டது. பல பொருட்கள் வீணானதுடன், நாங்களும் நிம்மதி இழந்தோம். எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் பயந்துவிட்டோம். அருகிலுள்ள வீடுகளிலும் மக்கள் அன்று துாங்கவில்லை. காலையில் தான், மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் வந்து சுத்தம் செய்து தந்தனர். இதே போல் மீண்டும் நிகழுமா என்பதும் அச்சமாகவே உள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் நிம்மதியாக துாங்க முடியாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கூறியதாவது:மிகவும் கவனத்துடன் தான் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. சுரங்கப்ணபாதை அமைக்க வேண்டிய வழிதடங்களில், எந்தெந்த பகுதிகள் வலுவிழந்துள்ளன என்பதை ஆய்வு செய்து பட்டியலிட்டு இருக்கிறோம்.மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE