செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் வீணடிக்கப்பட்டு உள்ளனவா என, மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஆண்டு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இங்கு, தினமும் 8,000க்கும் மேற்பட்டோ ருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த இந்திய கம்யூ., நிர்வாகி முத்துகுமார் என்பவர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய்க்கு அனுப்பப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பு கருவிகள் காலாவதியாகி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளனவா எ-ன ஆய்வு செய்ய, தமிழக மருத்துவத்துறை செயலருக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் பிரிவு மையத்திற்கு நேற்று முன்தினம் 'சீல்' வைக்கப்பட்டது.பின் மருத்துவமனை முதல்வர், வருவாய் துறை, போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் என, 10 பேர் குழுவினர், அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றி, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், ஆயிரக்கணக்கான ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் காலாவதியானது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் முத்துகுமரன் கூறியதாவது:
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், 10 பேர் மருத்துவக் குழுவினர், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் குறித்து ஆய்வு செய்தனர்.இதில் பல ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் காலாவதியாகி உள்ளன. நுண்ணுயிர் பிரிவு தலைவர் தான் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கண்காணிப்பார். இது தொடர்பாக, மருத்துவத்துறை இயக்குனர், கலெக்டர் ஆகியோருக்கு, அறிக்கை அனுப்பி உள்ளேன். காலாவதியான கருவிகள் மதிப்பு எவ்வளவு என்பதை மருத்துவ குழுவினரின் அறிக்கையில் தான் தெரிய வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE