மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, தண்ணீர் அதிகம் வரும் போது, சங்கொலி எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல்; மனைவி சங்குபதி, 50. மகள் கவிதா, 30, பேத்தி சாதனா, 11, தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மூவரும், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில், உப்பு பள்ளம் அருகே, பவானி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.அப்போது, மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெல்ஸ்புரம் கதவணையில் மின்சார உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விட்டதால், ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வந்தது. மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சண்முகம், சாதனாவை காப்பாற்றினார். சங்குபதியும், கவிதாவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியாயினர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி அருகே, பவானி ஆற்றில் இதுபோல் 5 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டு பலியாயினர். அதனால் ஆற்றில் நீர் வருவது குறித்து எச்சரிக்கை ஒலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெல்ஸ்புரம் கதவணையிலும், மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்திலும், எச்சரிக்கை சங்குகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் நீர் அதிகம் வரும் போது, எச்சரிக்கை சங்கொலி எழுப்பப்பட்டது. காலப்போக்கில் பவானி ஆற்றில் நீர் வருவது குறித்து, மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் எச்சரிக்கை சங்கொலி ஒலிக்க செய்வதில்லை. நேற்று முன்தினம் எச்சரிக்கை சங்கொலி ஒலிக்க செய்யாததால் தான், பவானி ஆற்று நீரில் இருவர் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் நடந்தது. எனவே, இனிவரும் காலத்தில், ஆற்றில் நீர் அதிகம் வருவது குறித்து, எச்சரிக்கை சங்கொலி ஒலிக்க செய்ய வேண்டும். ஆற்று நீரில் மனிதர்கள் அடித்து செல்லப்பட்டு இறப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை காப்பாற்றிய சண்முகத்தை போலீசார் பாராட்டினர்.எடுத்துட்டு போயிட்டாங்க...மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''பவானி ஆற்றில் அதிக நீர் வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையத்தில் சங்கு அமைத்து ஒலிக்க செய்துள்ளனர். ஓராண்டுக்கு பின் அந்த சங்கை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது,'' என்றார்.நடவடிக்கை எடுக்கப்படும்மேட்டுப்பாளையம் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, ''நான் புதிதாக பொறுப்பேற்று ஒரு வாரம் தான் ஆகிறது. பவானி ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவது குறித்து, மக்களுக்கு தெரியப்படுத்த, துறை சார்பில் எச்சரிக்கை சங்கு அமைக்கப்பட்டு இருந்தால், அலுவலக பணியாளர்களிடம் விபரம் கேட்டு, சங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE