லண்டன்: '‛தேவைப்பட்டால் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவி செய்வோம்,'' என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். விரைவில் அங்கு அரசு அமைக்கப்படும் என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிச்சயமாக ஜனநாயக ஆட்சி இருக்காது, ஷாரியத் சட்டப்படியே ஆட்சி இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கானில் இருந்து வெளியேறி, மற்ற நாடுகளில் தஞ்சம் புக, மக்கள் காட்டிய பதற்றம் சற்று தணிந்து உள்ளது. இதுவரை ஆப்கானில் இருந்து 1,615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கான் மக்கள்.
ஆப்கான் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரிட்டன் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்' என, போரிஸ் ஜான்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE