பொது செய்தி

தமிழ்நாடு

'பழைய இரும்புக்கு பழைய லாரிகள்' புதிய கொள்கையில் வருமா திருத்தம்?

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 21, 2021
Share
Advertisement
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, பழைய வாகனங்களை அழிப்பதற்கான தேசிய கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் வெளியிட்டார். பழைய, பயன்படுத்த முடியாத வாகனங்களை அழிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும், இந்தக் கொள்கையில், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஒரு வாகனம் ஓடியதாலேயே, அதை அழிக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, அதன் தகுதியை ஆய்வு செய்த பின், அழிக்க வேண்டுமா என்பதை
 'பழைய இரும்புக்கு பழைய லாரிகள்' புதிய கொள்கையில்  வருமா திருத்தம்?

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, பழைய வாகனங்களை அழிப்பதற்கான தேசிய கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் வெளியிட்டார்.

பழைய, பயன்படுத்த முடியாத வாகனங்களை அழிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும், இந்தக் கொள்கையில், குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஒரு வாகனம் ஓடியதாலேயே, அதை அழிக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, அதன் தகுதியை ஆய்வு செய்த பின், அழிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை தொடர்பாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பொருளாளர் சி.தனராஜ் கூறியதாவது:இந்த புதிய கொள்கை வரவேற்கத்தக்கது. ஒருசில திருத்தங்களை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில், கனரக வாகனங்களாக, 4.5 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடினால், அவற்றை பரிசோதனை மையங்களுக்கு ஓட்டிச் சென்று, அதன் தகுதி, தரத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது இந்தக் கொள்கை.

பத்தாண்டுகளுக்கு பதில், 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். ஏனெனில், இந்த வாகனங்களில், 1.5 லட்சம் லாரிகளின் உரிமையாளர்களே, அதன் ஓட்டுனர்களாக உள்ளனர். லாரிகள் ஓடினால் தான், அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும். திடீரென்று, அவர்களுடைய லாரிகளை அழிக்க வேண்டும் என்றால், வாழ வழியற்று போய் விடுவர்.


வாடகை அதிகமில்லை

இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சிவில் சப்ளை துறையினரின் லோடு களையும், சரக்கு ரயில்களில் வரும் கோதுமை போன்ற உணவுத் தானியங்களையும் எடுத்துச் செல்ல, பழைய லாரிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அரசுத் துறை கொடுக்கும் லாரி வாடகை அதிகமில்லை. அங்கே புதிய லாரிகளை ஓட்ட முடியாது; கட்டுப் படியாகாது. இத்தகைய இடங்களில் தான், ஓனரே டிரைவர்களாகவும் இருப்பர்.

கனரக வாகனங்களின் நிலைமை இதுவென்றால், இலகு ரக சரக்கு வாகனங்களின் நிலையோ இன்னும் மோசம். தமிழகத்தில் மட்டும் 12 - 15 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றிலும், 70 சதவீதம் வரை ஓனர்களே ஓட்டுனர்கள்.அந்த வாகனங்களை சீக்கிரமாக அழித்து விட முடியாது. பிரதமர் அறிவிப்பில் உள்ள ஆறுதலான அம்சங்களில் ஒன்று, குறிப்பிட்ட காலம் முடிந்து விட்டாலே, வாகனங்களை அழித்து விட வேண்டாம். அதன், 'பிட்னெஸ்'ஸை பரிசோதித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்பதே. அதற்காக தானியங்கி சோதனை மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதில் தான் சிக்கல். பரிசோதனை செய்வதை, வட்டார போக்குவரத்து அலுவலகமே செய்தால் தான் சரியாக இருக்கும். தனியார் தானியங்கி சோதனை மையங்கள், வாகனங்களுக்கு பிட்னெஸ் சான்றிதழ் தர, அநியாய கட்டணம் கோரலாம். மேலும், சாதாரணமாக, எப்.சி., எனப்படும், 'பிட்னெஸ் சர்டிபிகேட்' வாங்க, 1,000 ரூபாய்க்குள் தான் கட்டணம்.


பசுமை வரி

தானியங்கி சோதனை மையங்கள் வழியாக சான்றிதழ் பெற்று, மேலும் ஐந்தாண்டுகளுக்கு லாரிகளை ஓட்ட அனுமதி வாங்கும் போது, ஆண்டு ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாயும், பசுமை வரியும் கட்டச் சொல்கின்றனர். இவற்றையும், மத்திய அரசு குறைக்க வேண்டும். பழைய லாரிகளை விற்று, புது லாரி வாங்க வசதியற்றவர்கள் தான் ஏராளம்.

இந்நிலையில், பழைய லாரியை, பழைய இரும்புக்கு போட்டுவிட்டால், 3 லட்சம் ரூபாய் கிடைக்கலாம். அதற்கான சான்றிதழ் கொடுப்பர். புது லாரி வாங்கும் போது, இந்த, 3 லட்சம் ரூபாயைக் குறைத்துக் கொள்வர் என்று, புதிய கொள்கை சொல்கிறது. 30 லட்சம் ரூபாய் விலை கொண்ட லாரியை, இவர்களால் வாங்க முடியுமா; முடியவே முடியாது.அதனால், இந்தச் சான்றிதழை மாற்றத்தக்கதாக வழங்க வேண்டும் என்று கோருகிறோம். புது லாரி வாங்குவதற்கு யாரிடம் வசதியுள்ளதோ, அவர்களுக்கு இந்தச் சான்றிதழைக் கொடுத்து விடலாம் அல்லவா?

பழைய கனரக வாகனங்களை அழிப்பதற்கான காலக்கெடுவாக, 2023 ஏப்ரல், 1ம் தேதியைக் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில், ஒரு, 'ஸ்கிராப்பிங்' மையமும் இயங்கத் துவங்கவில்லை. இந்நிலையில், வாகன முதலாளிகளின் நிலையையும் மனத்தில் வைத்து, மத்திய அரசு இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு தனராஜ் கூறினார்.
- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X