சென்னை:தென்மேற்கு பருவ மழை கைகொடுக்காததால், தமிழக அணைகளில் 46 சதவீதம் அளவிற்கு, நீர் இருப்பு குறைந்துள்ளது.
தமிழகத்தில், 90 அணைகள், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி.,யாகும். தென்மேற்கு பருவ மழை காலங்களில், பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவ மழை, தமிழகத்திலும், கர்நாடகா, கேரளாவிலும், இன்னும் தீவிரம் அடையவில்லை.இதனால், தமிழகத்தில் உள்ள, 90 அணைகளுக்கு போதிய நீர்வரத்து இன்னும் கிடைக்கவில்லை. தற்போது வரை, அணைகளில் 54.7 சதவீதம் அளவிற்கு 122 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக, மேட்டூரில் 29.7 டி.எம்.சி., நீர் உள்ளது. ஈரோடு, பவானி சாகரில் 29.5; பரம்பிக்குளத்தில் 12.4; முல்லைபெரியாறில் 5.45; வைகையில் 5.18; சோலையாறில் 5.09 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இதனால், அணைகள் நிரம்புவதற்கு இன்னும் 46 சதவீதம் அளவிற்கு 102 டி.எம்.சி., நீர் தேவைப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக் காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், அதற்குள் அணைகள் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE