உத்தர பிரதேசத்தின் அலிகர் மற்றும் மெயின்புரி நகரங்களின் பெயர்களை மாற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது. இது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றியை தேடித் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. கடந்த 2017ல் நடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது.இந்நிலையில், 2018ல் அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்றும், பைசாபாதின் பெயர் அயோத்யா, முஹல்சராயின் பெயர் பண்டிட் தீன்தயாள் நகர் என்றும் மாற்றப்பட்டன.
இதையடுத்து, 'அலிகரின் பெயரை ஹரிகர் என்று மாற்ற வேண்டும்' என, அந்த மாவட்டத்தின் பஞ்சாயத்து கூட்டத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மெயின்புரியின் பெயரை மாயன் நகர் என்று மாற்ற, அந்த மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அலிகர் மற்றும் மெயின்புரி நகர் மற்றும் மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு, யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
சிறுபான்மையினரான முஸ்லிம்களின், அலிகர் முஸ்லிம் பல்கலை அமைந்துள்ள அலிகரின் முந்தைய பெயர் ஹரிகர். கடந்த 1700களின் மத்திய காலக்கட்டத்தில், அங்குள்ள கோட்டையின் பெயரான அலிகர், நகரத்துக்கும் சூட்டப்பட்டது.
தீர்மானம்
கடந்த 1992ல், பா.ஜ.,வைச் சேர்ந்த கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோது, அலிகரின் பெயரை மாற்ற முயற்சி நடந்தது. ஆனால், மத்தியில் இருந்த காங்., அரசு அதை ஏற்கவில்லை. இந்த நகருக்கு, ஹரிகர் என்ற முந்தைய பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும் என, 2015ல் வி.எச்.பி., வலியுறுத்தியது.
கன்னோஜ் பேரரசின் கீழ் இருந்த மெயின்புரி, 12வது நுாற்றாண்டில் முஸ்லிம் அரசர்களால் ஆளப்பட்டது. ஜாட் சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், அவர்களுடைய மெய்னி கோத்ரம் அடிப்படையில் மெயின்புரி என்று அழைக்கப்பட்டது. இந்த நகருக்கு மாயன் நகர் என்று பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



இவற்றைத் தவிர, 'பெரோசாபாத் மாவட்டத்தின் பெயரை, இந்த பகுதியில் வசித்ததாக கூறப்படும் மன்னர் சந்திரசேன் நினைவாக, சந்திரா நகர் என்று மாற்ற வேண்டும்' என, மாவட்ட பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்பு சந்திராவர் நகர் என்று அழைக்கப்பட்ட இந்த நகரின் பெயரை, அக்பரின் பிரதிநிதியான பெரோஷ் ஷா, தன் பெயரை குறிக்கும் வகையில் மாற்றினார்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பெயர் மாற்றம் செய்யப்படுவது அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அலிகர் மற்றும் மெயின்புரி, மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லியில் நடந்து வரும் போராட்டத்தில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை உள்ளது. அதை மாற்றும் வகையில், இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முஸ்லிம் அரசர்களால் சூட்டப்பட்ட முஸ்லிம் பெயர்களை மாற்றுவதன் மூலம், தன் ஹிந்துத்துவா கொள்கையை பா.ஜ., உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. 'இந்த நகர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகளும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
பிரச்னை
ஹிந்துக்களின் ஓட்டுகளை சிதறாமல் பெறுவதற்காக, யோகி ஆதித்யநாத் அரசு, இந்த பெயர் மாற்றும் வழியை கையாள்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மாநிலம், வேலைவாய்ப்பின்மை, கொரோனாவை கட்டுப்படுவதில் சரியாக செயல்படாதது, விவசாயிகள் போராட்டம் என பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், இந்தப் பெயர் மாற்றம் யோகி ஆதித்யநாத் அரசுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -