எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஆன்மிக புகழ் பரப்பும் ஓரிக்கை மகா மண்டபம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர், நாடு முழுதும் நடந்தே சென்று, ஆன்மிகத்தை பரப்பினார். இறுதியாக, காஞ்சி ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது, காமாட்சி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். அவரை தணிப்பதற்காக சக்கரம் நிறுவி, காமாட்சியம்மன் உக்கிரத்தை ஆவாஹனம் செய்து, சாந்த சொரூபிணியாக்கினார்.இதையடுத்து, காஞ்சியில் சங்கர மடத்தையும் நிறுவி, குரு பரம்பரையையும்
ஆன்மிக புகழ் பரப்பும் ஓரிக்கை மகா மண்டபம்

பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர், நாடு முழுதும் நடந்தே சென்று, ஆன்மிகத்தை பரப்பினார். இறுதியாக, காஞ்சி ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது, காமாட்சி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். அவரை தணிப்பதற்காக சக்கரம் நிறுவி, காமாட்சியம்மன் உக்கிரத்தை ஆவாஹனம் செய்து, சாந்த சொரூபிணியாக்கினார்.

இதையடுத்து, காஞ்சியில் சங்கர மடத்தையும் நிறுவி, குரு பரம்பரையையும் ஏற்படுத்தினார். இம்மடத்தின், 68வது பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கான மகா மண்டபம், காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடன், பழங்கால முறையில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மணி மண்டபம் உருவான விதம் குறித்து, சங்கர மடத்தின் கோபாலபுரம் மணி அய்யர், ஸ்ரீவித்யா உபாசகர் தினகரன் சர்மா ஆகியோர் கூறியதாவது:'பிரதோஷ மாமா' என அழைக்கப்படுபவர், வெங்கடராம அய்யர். ஏழை பிராமணரான அவர், '68வது பீடாதிபதிக்கு மண்டபம், பிரமாண்டமாக கருங்கல்லியே கட்ட வேண்டும்; அது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும்' என்று கருதினார்.

அதற்காக, பாலாறு ஆற்றங்கரையோரம் ஓரிக்கையில், பலருடைய உதவியால், அங்கு பல ஏக்கர் வாங்கினார். அங்கு மகா மண்டபம் கட்ட, 1990ல் இருந்து முயற்சிகளை மேற்கொண்டார். 1997 ஜூன் மாதம், ஸ்திர லக்னத்தில் பூமி பூஜைக்கு நாள் பார்க்கப்பட்டது.


பழங்கால கட்டட முறை

மகா மண்டபத்தின் கர்ப்பக்கிரஹம் மேல் 100 அடி உயர விமானம் வர வேண்டும். அடியில் 'பைல் பவுண்டேஷன்' போட்டால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் நிற்காது. என்ன செய்வது என்று ஆலோசித்தோம்.மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் கோவில்கள் போல, அதே தொழில்நுட்பத்தில், மணலால் நிரப்பி, சுண்ணாம்பு சேர்த்து உறுதி செய்யப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. மகா பெரியவரின், 100 வயதை கணக்கில் வைத்து, மகா மண்டபத்தின் கர்ப்பக்கிரஹ விமானமும், 100 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பக்கிரஹத்தில், மகா பெரியவர் அருள்பாலிக்கும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
பேளா ஸ்தாபனம்

மகா மண்டபத்தில், 100 துாண்கள் உள்ளன. அது, மகா சுவாமியின், 100 வயதை குறிப்பிடுவதாக உள்ளன. சேர, சோழ, பல்லவர் கால கட்டக்கலை முறைப்படி, இரண்டு குதிரை, சிங்கம், அதன் வாயில் உருளும் பந்து உள்ளது.மகா மண்டபத்தின் பாவு கற்களின் நடுவில் கற்சங்கிலியும் தொங்கவிடப்பட்டுள்ளது. பாவு கற்களின் கீழ், 'பேளா ஸ்தாபனம்' செய்யப்பட்டது.

வெள்ளிப் பெட்டியில், 28 பொருட்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.தென், வடமேற்கு பக்கத்தில் உள்ள சுவரில் குரு பரம்பரையும், ஒரே கல்லால் ஆன மகா சுவாமிகளுடன், பிரதோஷ தாண்டவச் சிற்பமும் உள்ளது.


சந்தனப் பாதுகை

மகா பெரியவரின் பாதத்தில் அணிந்த சந்தனப் பாதுகை, பலர் கைங்கர்யத்தால் தங்க கவசம் போடப்பட்டது. 2011ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்த அன்று முதல், அந்த பாதுகைகள், ஓரிக்கை மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு, ஆராதனை செய்யப்படுகின்றன. பாதுகைகளை வைக்க, தங்கத் தகடு வேயப்பட்ட வெள்ளி மண்டபமும் செய்யப்பட்டுள்ளது.தென்மேற்கு பகுதியில், இரண்டு கருங்கற்களுக்கு இடையே 150 கிலோ எடை மணி பொருத்தப் பட்டு உள்ளது.


ஒரே கல்லால் மகா நந்தி

அடுத்ததாக நந்தி மண்டபம், 16 துாண்களால் அமைக்க பட்டு உள்ளது. 50 டன் கல்லால் நந்தி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த துாண்கள், பல்வேறு சப்தங்கள் எழுப்பும் வகையில், பழங்கால தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.நந்தி மண்டபம் அருகே 45 அடி உயர, ஒரே கல்லால் ஆன தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள 48 அடி உயரம் ராஜகோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.


தடாக பிரதிஷ்டை

மண்டபத்தை சுற்றி 30 ஆயிரம் சதுர அடியில் 12 அடி அகலத்திற்கு கருங்கல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டப குளம், எண்கோணத்தில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவே, யாழி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.மகா மண்டபத்தில் கும்பாபிஷேகம் நடத்தியது போல, குளத்திற்கு கும்ப நீர் சேர்த்து, தடாக பிரதிஷ்டை நடத்தப்பட்டது.


இலவச பால்

இங்குள்ள கோ சாலையில், 140 பசுக்கள்ஜீவிக்கின்றன. கோ சாலை பசுக்களின் பால் விற்பனை செய்யப்படுவதில்லை. மண்டப அபிஷேகம், அன்னதானம் போக, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.யஜுர்வேத பாடசாலைமகா மண்டபம் அருகே தங்கும்அறைகளும் உள்ளன. இங்கு, யஜுர்வேத பாடசாலை இலவசமாக நடத்தப்படுகிறது. மணிமண்டபத்திற்கு தனி நந்தவனம் உள்ளது. தற்போது 12 ஏக்கர் பரப்பளவில், மகா மண்டபம், ஆன்மிக புகழ் பரப்பும் தலமாக காட்சியளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
22-ஆக-202122:44:20 IST Report Abuse
N Annamalai ஊரின் வரலாறையும் சொல்லி இருக்கலாம் .ஆனாலும் பதிவிற்கு நன்றி
Rate this:
Cancel
22-ஆக-202122:38:23 IST Report Abuse
theruvasagan ஒரிக்கையில் தங்கினவர் வரதராஜப் பெருமாள் அல்ல. வடமொழியில் யதோக்தகாரி என்று அழைக்கப்படும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். தன் குருவான திருமழிசை ஆழ்வார் காஞ்சி மன்னனை புகழ்ந்து பாடமாட்டார் என்று தெரிவித்த சீடன் கணிகண்ணன் என்பவரை அரசன் ஊரை விட்டு போகும்படி ஆணையிட தன் சீடனோடு தானும் கிளம்பிய ஆழ்வார் பெருமாளையும் நீயும் இங்கு கிடக்க வேண்டாம் எங்களோடு புறப்பட்டு வந்து விடு என்று சொல்ல தன் பக்தன் சொன்ன வண்ணம் பெருமானும் தன்னுடைய படுக்கையான ஆதிசேஷனை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஆழ்வாருடன் கிளம்பி விட்டாராம். அன்று இரவு அவர்கள் தங்கிய ஊர் ஓர் இரவு இருக்கை என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ஒரிக்கை என்று ஆனதாம். வடமொழி பதமான யதோக்தகாரி என்பதை சற்றும் பொருள் மாறாமல் தீந்தமிழில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்கிற சொல்லால் தமிழும் ஆன்மீகமும் ஔிவீசும் அழகை நமக்குத் தந்தவர்கள் நமது முன்னோர்கள். பல மொழிகளில் உள்ள நயத்தை ரசிக்க நமக்கு இலக்கிய ரசனையும் விசாலமான மனதும் வேண்டும். துரதிருஷ்டவசமாக எல்லோரிடமும் அவை இல்லை.
Rate this:
Cancel
padma -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-202115:16:07 IST Report Abuse
padma Varadaraja perumal அங்கு ஓர் இரவு இருக்கும் படி ஆனதால் ஓரிரு க்கை எனவும் கூறப்படுகிறது.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-ஆக-202120:39:53 IST Report Abuse
தமிழ்வேள்வரதராஜ பெருமாள் அல்ல ...திருவெஃகா , சொன்னவண்ணம் செய்தபெருமாள் .......திருமழிசையாழ்வாருக்காக நடத்திய லீலை அது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X