கர்நாடகாவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை அபாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் உணவு தானியங்கள் பற்றாக்குறை அபாயம்

Added : ஆக 22, 2021
Share
பெங்களூரு : அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, நகர் மயமாவது, தொழிற்சாலைகள், குவாரி தொழில் உட்பட, பல்வேறு காரணங்களால், கர்நாடகாவில் விளை நிலங்களின் பரப்பளவு, நாளுக்கு நாள் குறைகிறது.இதன் விளைவாக, எதிர்க்காலத்தில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்பது, 'இஸ்ரோ' ஆய்வில் தெரிய வந்துள்ளது.நமது நாட்டில் விவசாய பரப்பளவு, நாளுக்கு நாள்

பெங்களூரு : அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, நகர் மயமாவது, தொழிற்சாலைகள், குவாரி தொழில் உட்பட, பல்வேறு காரணங்களால், கர்நாடகாவில் விளை நிலங்களின் பரப்பளவு, நாளுக்கு நாள் குறைகிறது.

இதன் விளைவாக, எதிர்க்காலத்தில் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்பது, 'இஸ்ரோ' ஆய்வில் தெரிய வந்துள்ளது.நமது நாட்டில் விவசாய பரப்பளவு, நாளுக்கு நாள் குறைகிறது. குறிப்பாக கர்நாடகாவில், விளை நிலங்கள் கட்டடங்களாக, அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறுகின்றன.மண்ணின் வளம், வறண்ட பகுதிகளின் அளவை தெரிந்து கொள்ளும் நோக்கில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் மூலம், 'இஸ்ரோ' எனும் விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

மண் வளம் இழப்புகர்நாடகாவில் 3.8 லட்சம் ஏக்கர் பகுதி மண் வளத்தை இழந்து வறண்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் வறண்டுள்ளது. கர்நாடகாவின் 36.26 சதவீதம் விவசாய நிலம், மண் வளத்தை இழந்துள்ளது.தனியார் நபர்கள், விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி, அடுக்கு மாடி குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், சொகுசு விடுதிகள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் கட்டுகின்றனர். அரசும் கூட பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்துகிறது.கிராமப்பகுதிகள் குறைந்து, நகரப்பகுதி பரப்பளவு அதிகரிக்கிறது.

விவசாய நிலத்தை, விவசாயம் சாராத நிலமாக பரிமாற்றம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.லட்சக்கணக்கில் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு பயிரிட்ட விளைச்சல்களுக்கு, நியாயமான விலை கிடைப்பதில்லை. போட்ட முதலீடும் கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.விவசாயம் லாபம் தராத தொழிலாக உள்ளதால், பலரும் விரக்தியடைந்து, விவசாய நிலத்தை விற்றுவிட்டு, நகருக்கு பிழைக்க செல்கின்றனர்.

இதுவும் விளை நிலங்கள் பரப்பளவு குறைய, முக்கிய காரணம்.இதற்கிடையில், மாநிலத்தின் பல இடங்களில், குவாரி தொழில் நடக்கிறது. அதிக வீரியம் கொண்ட வெடிப்பொருள் பயன்படுத்தி, பாறைகளை தகர்ப்பதால், ரசாயன துகள்கள், விளை நிலங்கள் மீது விழுந்து, மண்ணின் தரத்தை குறைக்கிறது.இதே சூழ்நிலை நீடித்தால், மாநிலத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.எச்சரிக்கை மணிவிவசாய வல்லுனர்கள் கூறியதாவது:15 ஆண்டுகளில், 1.73 லட்சம் ஏக்கர் விளை நிலம், வறண்டுள்ளது சாதாரண விஷயமல்ல.

இது அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாகும். விவசாய நிலங்கள் குறைந்தால், இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.அதை கட்டுப்படுத்த நமக்கு சக்தியிருக்காது. அபாயத்தை அலட்சியப்படுத்தாமல், விழிப்படைய வேண்டிய அவசியம் உள்ளது.விளை நிலங்கள் குறைந்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும். உணவு தானியங்களுக்காக, வெளி மாநிலங்களை நம்ப வேண்டி வரலாம்.வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். சமுதாயம், மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படலாம். மக்கள் கூட்டம், கூட்டமாக வேறு இடங்களூக்கு பிழைப்பு தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.இதை மனதில் கொண்டு, விளை நிலங்களை பாதுகாக்க, பரப்பளவை அதிகரிக்க, இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X