உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கே.பத்மபிரியா, வழக்கறிஞர், சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் உடனே எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசும், தி.மு.க.,வும் விண்ணுக்கும் மண்ணுக்குமாக குதிப்பது வழக்கம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், 'பாஸ்டேக்' என்ற மின்னணு முறையில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் வசதியை, மத்திய அரசு 2016ல் அறிமுகம் செய்தது.அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச் சாவடிகளில், இந்த பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது.

வழக்கம்போல காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுமக்கள் சிலருக்கும் இதனால் சிறிது சிரமம் ஏற்பட்டது உண்மை தான்.ஆனால் பாஸ்டேக் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் தான் தெரிகிறது, பழைய முறையில் தினமும் பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ள விவகாரம். ஒரு ஆண்டுக்கு 6,120 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது!ரேஷன் கார்டுடன், 'ஆதார்' எண் இணைக்க வேண்டும் என அறிவித்த பின், பல லட்சம் போலி கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதே போல, '100 நாள்' வேலை திட்டத்திலும் போலி பதிவேடுகள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிவாயு, விவசாயிகளுக்கு நிவாரண நிதி உட்பட அரசு திட்டங்களில் நடந்த ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.'அரசு அளிக்கும் 1 ரூபாய் மானியத்தில் 15 காசுகள் மட்டும் தான் பயனாளியை சென்று சேர்கிறது' என, முன்னாள் பிரதமர் ராஜிவ் வேதனையோடு தெரிவித்தார்.'ஜன்தன்' வங்கி கணக்கு துவங்கி அனைத்து மக்களும் வங்கி சேவையை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியபோது, எதிர்க்கட்சியினர் அதை கேலி செய்தனர்.
ஆனால் இன்று அரசின் நிவாரண தொகை, பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக, முழுமையாக சென்று அடைகிறது.பழைய பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டன.ஆனால் அந்த கஷ்டத்தை நாம் தாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் ஊடுருவி இருந்ததை கண்டுபிடித்து, நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது. பல கோடி ரூபாய் கறுப்பு பணம் அழிக்கப்பட்டது.எந்த ஒரு திட்டத்தையும் அரசு துவங்கும் போது சில சிக்கல்கள் எழும். அதை சமாளித்து விட்டால், பின்னாளில் சிறந்த பயனை தரும். மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடரட்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE