ஈரோடு: ஈரோடு அருகே கண்ணவேலம்பாளையத்தில், கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளத்தூர் பிரதான வீதி, கிழக்கு வீதி, ஆதிதிராவிடர் காலனி, புதுவலசு, முள்ளம்பட்டி, வரவன்காடு, கரையன்காடு ஆகிய பகுதியில் தண்ணீர் புகுந்தது. கடந்த, 19 இரவு முதல் நேற்று மூன்றாம் நாளாக தண்ணீர் வெளியேறுவதால், 100 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களில் தண்ணீர் நிற்கிறது. இதற்கிடையில், நேற்று வருவாய் துறையினர் ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதா தலைமையில், அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ., முன்னிலையில், பாதிக்கப்பட்ட முழு வீடு, பகுதியான பாதிப்பு வீடு, கொட்டகை, பிற பொது கட்டடங்கள், விளை நிலங்கள், கிணறு, பம்புசெட், ஆழ்துளை கிணறு, பயிர் வாரியான பாதிப்பு, மரம் போன்றவைகளை பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாதிப்புக்கு, உரிமையாளர்களின் ஆதார் எண், உரிய ஆவணம், முகவரி, போன் எண் போன்றவற்றை பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் மரம், பிற பயிர்கள், ஊடுபயிர் என புல எண்ணுடன் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். தவிர, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறையினர் சாலை, வாய்க்கால் பகுதிகளை கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE