கரூர்:''மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கரூரில் அவர் அளித்த பேட்டி:வடசென்னை அனல் மின் நிலையத்தில், 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மின் துறையை நிர்வாகம் செய்த தங்கமணி, அவர்கள் அமைத்த குழுதான், நிலக்கரி மாயம் தொடர்பான அறிக்கை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் குழு அமைத்து இருந்தால், அதற்கான ஆதாரம், குழுவின் அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். அவர்கள் அப்படி குழு அமைத்து, ஆய்வு செய்து இருந்தால், தவறு செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இயக்குனர் தங்கர்பச்சானின் கோரிக்கை, மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை படிப்படியாக, நிறைவேற்றப்படும். கோடநாடு விவகாரத்தில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையை கண்டு, எதிர்க்கட்சி தலைவர் ஏன் பயப்பட வேண்டும்.தவறு செய்யாதவர்கள், விசாரணைக்கு தயாராக வேண்டியதுதானே. அவர்கள் மடியில் கனம் உள்ளதால், வழியில் பயம் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு, கோடநாடு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE