ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரை தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டு, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி பேசியதற்கு பா.ஜ., மற்றும் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பெரும்பான்மை
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி பேசியதாவது:ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. ஆனால் நாட்டைக் கைப்பற்றியதுடன், அமெரிக்க படைகளை தலிபான் துரத்தி அடித்து உள்ளது.
அதேபோல் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பறித்ததுடன், இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. காஷ்மீர் பிரச்னை குறித்து பயங்கரவாதிகளுடன் பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேச்சு நடத்தினார். இங்குள்ளவர்களை விடுத்து, நம் நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் மத்திய அரசு பேசி வருகிறது.
மக்களின் விருப்பத்தைக் கேட்டு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு மண்டியிடும் நிலை விரைவில் உருவாகும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை; உடனடியாக பறித்த உரிமைகளை மத்திய அரசு திரும்ப தர வேண்டும்.நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜனநாயகத்தை மதிக்கும் காங்., அரசு இருந்தது. அதனால் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு - காஷ்மீர், ஹிந்து நாடான இந்தியாவுடன் இணைந்தது. அப்போது பா.ஜ., ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக சேர்ந்திருக்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவிந்தர் ரெய்னா கூறிஉள்ளதாவது:மெஹபூபா தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. இந்தியா மிகவும் வலுவான நாடு. நம் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியான தலைவர்.ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. தலிபான், அல் குவைதா, லஷ்கர் - இ - தொய்பா உட்பட நம் நாட்டுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நசுக்குவோம்.
வன்முறை
நம் நாட்டுக்கு எதிராக மெஹபூபா மிகப்பெரிய பாவத்தைச் செய்துள்ளார். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அதனால் தான் தேசப்பற்று உள்ள காஷ்மீர் மக்கள் இவரைப் போன்றவர்களை நிராகரித்துள்ளனர்.மக்களின் உரிமைகளை பறித்துள்ள, அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ள தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரை அதனுடன் ஒப்பிடுவது மிகப்பெரும் தவறு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்., செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியுள்ளதாவது:மெஹபூபாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. அமைதியை வலியுறுத்தாமல், அரசின் கொள்கைகளை எதிர்க்காமல், வன்முறையைத் துாண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். இது அவமானத்துக்கு உரியது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE