கோவை:பாரதியார் பல்கலை, 'சிண்டிகேட்' குழுவில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசு, அரசு கல்லுாரிகளுக்கு மறுக்கப்படுவதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாரதியார் பல்கலையின் கீழ், 120 கல்லுாரிகள் உள்ளன. கல்லுாரி எண்ணிக்கைக்கு ஏற்ப, செனட் குழுவில், 11 அரசு, 10 அரசு உதவி பெறும், 100 தனியார் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்று இருப்பர்.கல்லுாரிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்ட, செனட்' உறுப்பினர்களே, சிண்டிகேட்டுக்கான தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
செனட் குழு உறுப்பினர் எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு காரணமாக, ஒவ்வொரு தேர்தலிலும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி பிரிதிநிதிகள், சிண்டிகேட் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டும், தோல்வியை தழுவும் நிலை தொடர்கிறது.இதன் காரணமாக, பாரதியார் பல்கலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, சிண்டிகேட் உறுப்பினர் பதவி, அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி பிரதிநிதிகளுக்கு கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு கல்லுாரி பேராசிரியர் சங்கத்தின், மாநில தலைவர் வீரமணி கூறுகையில், பாரதியார் பல்கலையின் தற்போதைய சிண்டிகேட் குழுவில், பல்கலைக்கு பிரதிநிதியாக மூவர், தனியார் கல்லுாரி பிரதிநிதியாக இருவர் உள்ளனர்.அரசு கல்லுாரியின் பிரதிநிதிகள் இல்லாததால், இம்மாணவர்களின் பிரச்னைகள், தேவைகள் குறித்து பேச ஆளில்லை. பல்கலையின் தவறுகளை, அரசு கல்லுாரி பிரதிநிதிகளே சுட்டிக்காட்டுபவர்கள் என்பதால், அதை தவிர்க்கவே இவ்வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.அரசு கல்லுாரிகளுக்கு இடையே தேர்தல் நடத்தி, சிண்டிகேட் பிரதிநிதித்துவம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்து பல்கலைகளிலும் செயல்படுத்த, கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE