திருப்பூர்:டெங்கு, மலேரியா தடுக்க, மாவட்டத்தில், வீடு, வீடாக குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.மழை காலங்களில் நன்னீரில் 'லார்வா'க்கள் மூலம் கொசு பெருக்கம் அதிகமாகிறது. கொசு பரவலை கட்டுப்படுத்தி விட்டால், டெங்கு பரவலை முடிந்தவரை தடுக்க முடியும் என்பதால், கொரோனா சற்று குறைந்துள்ள இந்த தருணத்தில், கொசு ஒழிப்பு பணியை துவக்க, மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தியுள்ளது.இதற்காக, திருப்பூர் மாவட்ட அளவில் ஆறு குழுக்கள், தாலுகா, வட்டாரத்தில் கிராம சுகாதார செவிலியர், கொசு ஒழிப்பு பணியாளர் அடங்கிய, 30 குழுக்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குழுவினர் வீடு, வீடாக சென்று கொசு பரவலுக்கான வழி ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். வீடுகளில் எங்காவது தண்ணீர் தேங்கி உள்ளதா, கழிவுநீர் தொட்டி, சுற்றுப்புற பகுதி துாய்மையாக உள்ளதா என ஆராய்கின்றனர்.அத்துடன், குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுக் கல், பழைய டயர், டியூப், தேங்காய் சிரட்டை, காலி பாட்டில்கள் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்கள் இருந்தால் அகற்றி வருகின்றனர்.மக்கள் நல்வாழ்வு துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், 'தினசரி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் ஒருவருக்கும் டெங்கு, மலேரியா பாதிப்பு இல்லை; இருப்பினும், மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டின் தினசரி குப்பைகளை அவரவர் தேக்கி வைக்கா மல், உடனுக்குடன் அகற்ற வேண்டும். சுகாதாரம்பேண வேண்டும்,' என்றார்.கொசுக்கடி பயங்கரம்!
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் கொசுமருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதில்லை. மாலை நேரங்களில் கொசுக்கடி அதிகரிக்கிறது. பொது இடங்களில் உடனடியாக கொசு மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், குப்பைகளை கொட்ட இடம் இல்லாத சூழல் உள்ளது. இதனால், பல இடங்களில், குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால், நோய் அபாயம் உருவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE