முன்னாள் முதல்வர்சித்தராமையா, மாநில காங்., தலைவர் சிவகுமார் இடையே கோஷ்டி பூசல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடையேயான கோஷ்டிப்பூசல் அதிகரித்துள்ளது. சிவகுமாரை மாற்ற வேண்டும் என, சித்தராமையா கோஷ்டி திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறது. மற்றொரு பக்கம் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களை தன் பக்கம் இழுக்க, சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.கர்நாடக காங்கிரசில், மாநில காங்., தலைவர் சிவகுமார்,

பெங்களூரு-கர்நாடகாவில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடையேயான கோஷ்டிப்பூசல் அதிகரித்துள்ளது.

சிவகுமாரை மாற்ற வேண்டும் என, சித்தராமையா கோஷ்டி திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறது. மற்றொரு பக்கம் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களை தன் பக்கம் இழுக்க, சிவகுமார் திட்டம் வகுத்துள்ளார்.கர்நாடக காங்கிரசில், மாநில காங்., தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ஒரே கட்சியில் இருந்தாலும், தனித்தனி தீவாக உள்ளனர்.

சிவகுமாருக்கு மாநில காங்., தலைவர் பதவி கிடைக்கக் கூடாது என, சித்தராமையா ஆதரவாளர்கள் கடுமையாக முயற்சித்தனர்.நெருக்கடி'சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சிவகுமார் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர். அவரை மாநில தலைவர் பதவியில் அமர்த்தினால், கட்சியின் இமேஜுக்கு களங்கம் நேரிடும். அவருக்கு பதிலாக வேறொருவரை, இப்பதவியில் நியமிக்க வேண்டும்' என நெருக்கடி கொடுத்தனர். ஆனால் காங்., மேலிடம் எதையும் பொருட்படுத்தாமல், சிவகுமாரை மாநில தலைவராக்கியது.சிவகுமார், சித்தராமையா இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள்; மக்களிடையே பிரபலமானவர்கள். கட்சி மேலிட அளவில் செல்வாக்கு உள்ளவர்கள். இரு தலைவர்களும் சமமான சக்தி கொண்டவர்கள்.

இருவரும் இரட்டை காளைகளாக, காங்கிரஸ் ரதத்தை இழுத்து, ஆட்சி பீடத்தில் அமர்த்துவர் என கட்சி மேலிடம் நம்புகிறது. ஆனால் சிவகுமார், சித்தராமையா தரப்பினர், நீயா, நானா என போட்டி போடுகின்றனர்.இருவருமே முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்துகின்றனர். அடுத்த சட்டசபை தேர்தலுக்குள், தங்களின் அரசியல் சக்தியை அதிகரித்து, முதல்வர் பதவியில் அமர்வது இவர்களின் எண்ணம் என காங்., வட்டாரங்கள் கூறுகின்றன.கட்சியை பலப்படுத்துவதுடன், தலைவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில், சிவகுமார் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்; அந்தந்த மாவட்டத்தின் தலைவர்களுடன் கூட்டம் நடத்துகிறார்.

இதற்கிடையில், இவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற, சித்தராமையா ஆதரவு கோஷ்டியினர், திரை மறைவில் முயற்சிக்கின்றனர்.பா.ஜ.,வில் எடியூரப்பாவை, முதல்வர் பதவியிலிருந்து மாற்றியதால், அதிருப்தியில் உள்ள லிங்காயத் சமுதாயத்தினரை, காங்கிரசுக்கு இழுக்கலாம். இதற்கு லிங்காயத்து சமுதாயத்தினரையே, மாநில காங்., தலைவராக அமர்த்தினால், உதவியாக இருக்கும் என, கட்சி மேலிடத்தின் காதில் ஓதியுள்ளனர். ஆனால், காங்., மேலிடம் எதையும் பொருட்படுத்தவில்லை.

கர்நாடக காங்கிரஸ் தலைவரை மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.வாய் திறக்கவில்லைஇதனால் சிவகுமாரின் உற்சாகம் அதிகரித்துள்ளது. முன்பை விட அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறார். குறிப்பாக சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்களை, தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் சிவகுமார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.காங்., - எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடந்தபோது, டில்லியில் இருந்த சிவகுமார் அவசர ஊடக சந்திப்பு நடத்தி, 'இது அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனை' என, குற்றஞ்சாட்டினார். ஆனால், ஜமீருக்கு மிகவும் நெருக்கமான சித்தராமையா வாய் திறக்கவில்லை.இத்தனைக்கும் ஜமீர், சித்தராமையாவின் தீவிர விசுவாசி. அவ்வப்போது, 'அடுத்த முதல்வர் சித்தராமையா' எனக் கூறி, சிவகுமாரின் கோபப் பார்வைக்கு ஆளானவர். அப்படியிருந்தும் சித்து, தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்ற வருத்தம் ஜமீருக்கு இருந்தது. இது, அவரை சிவகுமாருக்கு நெருக்கமாக்கியது.

இருவரும் இரண்டொரு முறை நேரில் சந்தித்து பேசினர். இவர்கள் நெருக்கமாவதை உணர்ந்த சித்தராமையா, திடீரென ஜமீர் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டார்.எதிர்பார்ப்புசிவகுமாரின் முயற்சி, ஜமீருடன் நிற்கவில்லை. சித்தராமையா கோஷ்டியில் உள்ள தலைவர்களின் நம்பிக்கையை பெற்று, தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் சிவகுமார் இறங்கியுள்ளார். இது, சித்துவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.தற்போது சித்து, ஜிந்தால் இயற்கை சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து புத்துணர்ச்சியுடன் திரும்பிய பின், தன் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள, என்ன திட்டங்கள் வகுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காங்கிரசார் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X