போலீசாருக்கான உடற்பயிற்சி மற்றும் தொப்பையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த கையேடு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனால், உடல் நலன் விஷயத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் போது, அதிகாலை 4:00 மணிக்கெல்லாம் எழுந்து விடும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள், ஓட்டமும் நடையுமாக உடற்பயிற்சி செய்வர். மரத்தில் கயிறு கட்டி ஏறுதல், நீளம் தாண்டுதல், தொள தொள சதைகள் இல்லாமல், கட்டுக்கோப்பான உடல் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், எழுத்து தேர்வுக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இருப்பர்.
பொருளாதார நெருக்கடி
ஆனால், போலீஸ் வேலையில் சேர்ந்த பின், பணிச்சூழல், தவறான உணவு பழக்கம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், உடல் நலன் மீது போலீசார் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால், உடல் தளர்வு, தொப்பை அதிகரிப்பு போன்ற உபாதைகளுக்கு ஆளாகி விடுகின்றனர்.வயிற்றுப் பகுதி யில் கொழுப்பு சத்து தங்கி விடுவதால் தொப்பை உருவாகிறது.
தொப்பையில் இருந்து விடுபட, அரிசி உணவை குறைத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு, குறைந்த அளவாவது சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஜிம் மாஸ்டர் உதவியுடன் தொப்பையை குறைக்கலாம் என, டாக்டர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான போலீசார் இதில் அக்கறை காட்டுவதில்லை. தற்போதுள்ள டி.ஜி.பி., சைலேந்திர பாபு, உடற்பயிற்சியில் தீவிர ஆர்வமிக்கவர். முறையான உணவு பழக்க வழக்கம், 'சைக்கிளிங்' செல்வது போன்ற நடைமுறைகளை கடைப்பிடிப்பவர்.

நல்ல வரவேற்பு
இதுபற்றி, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான, 'வீடியோ'க்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு போலீசார் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.அந்த வகையில், போலீசார் தங்கள் வாழ்வியல் நெறிமுறைகளை, எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவு உட்கொள்ளும் முறை, தினமும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம், தொப்பையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து, காவல் துறை சார்பில் கையேடு தயாரிக்கப்பட்டு, போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது. போலீசார் உடல் நலன் மற்றும் தொப்பை குறைப்பு குறித்து, காவல் துறை சார்பில், விரைவில் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வர இருப்பதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE