சென்னை-''தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளில் தாமரையை மலர வைப்பது தான், அடுத்த இலக்கு,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழகத்தில் இருந்து தேர்வாகி பணியாற்றி வரும், மத்திய அரசு வாரிய இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், வாரிய தலைவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள், அரசு வழக்கறிஞர்கள் என, 333 பேர் பங்கேற்றனர்.
அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தில் தாமரை மலராது என, விமர்சிக்கப்பட்ட நிலையில், முருகன் முயற்சியால், நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் தாமரை மலர வேண்டும் என்பது தான், பா.ஜ., வின் அடுத்த இலக்கு.மத்திய அரசின் வாரிய பதவிகளை சுமையாக கருதக்கூடாது; இனிய அனுபவமாக கருதி பணியாற்ற வேண்டும். துறை சார்ந்த புத்தகங்களை படித்து, துறை வளர்ச்சிக்கு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
வாரிய பதவிகள் வாயிலாக, பொதுமக்கள் பயன் அடைய வேண்டும். கட்சியினர் உற்சாகம் பெற வேண்டும். கட்சி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.பிரதமர் மோடியை போல, நாம் நுண்ணறிவுடன் பணியாற்றி, கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.என்.ராஜா உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பலர் பங்கேற்று பேசினர்.

'உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்'கூட்டம் முடிந்த பின், அண்ணாமலை அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., தயாராக உள்ளது. தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர், நகராட்சி தலைவர், மேயர் போன்ற பதவிகளில் பா.ஜ., சார்பில், நல்ல மனிதர்களை போட்டியிட வைத்து, வெற்றி பெற வைப்போம். இது தொடர்பாக, இன்று கமலாலயத்தில், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE