போலீஸ் செய்திகள்| Dinamalar

போலீஸ் செய்திகள்'

Added : ஆக 23, 2021
Share
ஆன்லைனில் மோசடி மதுரை: செக்கானுாரணி குமரேஷ். பேஷ்புக் வழியாக இவரை தொடர்பு கொண்ட இருவர், கடன் ஏற்பாடு செய்வதாக கூறினர். இதைநம்பி ரூ.51300ஐ ஆன்லைனில் செலுத்தினார். இதைதொடர்ந்து அவர்களின் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவுபடி ஏ.டி.எஸ்.பி., ராஜேஸ்வரி தலைமையிலான குழு விசாரித்து, மேலுார் பிரசாந்த்குமார்,

ஆன்லைனில் மோசடி

மதுரை: செக்கானுாரணி குமரேஷ். பேஷ்புக் வழியாக இவரை தொடர்பு கொண்ட இருவர், கடன் ஏற்பாடு செய்வதாக கூறினர். இதைநம்பி ரூ.51300ஐ ஆன்லைனில் செலுத்தினார். இதைதொடர்ந்து அவர்களின் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவுபடி ஏ.டி.எஸ்.பி., ராஜேஸ்வரி தலைமையிலான குழு விசாரித்து, மேலுார் பிரசாந்த்குமார், சரவணன் ஆகியோரை கைது செய்தது. ரூ.29300 மீட்கப்பட்டது.

மதுபாட்டில்கள் திருட்டு; இருவர் கைது

மதுரை: ஒத்தக்கடை அருகே அயிலாங்குடி மதுக்கடையை உடைத்து ரூ.2.19 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார், தோப்பூர் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1270 மதுபாட்டில்களை மீட்டனர். ஊமச்சிக்குளம் சங்கர் 22, கே.கே.நகர் விஜய் 24, ஆகியோரை கைது செய்தனர். கோவில்பாப்பாக்குடி அருண்குமார் 23, அஜீத்குமார் 26, தத்தனேரி டேனியல் 26, சீனு ஆகியோரை தேடி வருகின்றனர். போலீசாரை எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.

விபச்சாரம்: தி.மு.க., பிரமுகர் கைது

மதுரை: முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ்., காலனியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையிலான போலீசார் சோதனையிட்டு உறுதி செய்தனர். விபச்சார தொழில் செய்து வந்த வாடிப்பட்டி முடுவார்பட்டி தி.மு.க., பிரமுகர் பூசமலை 65, வளர்மதியை கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் இதே குற்றத்திற்காக தல்லாகுளம் போலீசாரால் பூசமலை கைது செய்யப்பட்டவர்.

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

மதுரை: வடக்குவெளிவீதி தபால் நிலைய அலுவலக வளாகத்தில் அத்துறையின் ஏ.டி.எம்., உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் இயந்திரத்தை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டார். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

6 பவுன் நகை திருட்டு

மதுரை: கூடல்நகர் ராஜேந்திரன் 71. பஸ்சில் புதுாருக்கு சென்றுவந்தபோது பையில் இருந்த 6 பவுன் மதிப்புள்ள வளையல்கள் திருடுபோயின. திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வங்கி மேலாளர் மீது வழக்கு

மதுரை: கிருஷ்ணாபுரம் காலனி விஜயலட்சுமி. இவருக்கு வங்கியில் தனிநபர் கடன் வாங்கித்தருவதாக கூறி வாகைகுளம் நவநீதகிருஷ்ணன் ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். அதை வைத்து அவர் கடன் வாங்கிக்கொண்டு மோசடி செய்தார். நவநீதகிருஷ்ணன், உடந்தையாக இருந்ததாக கே.கே.நகர் கரூர் வைஸ்ய வங்கி மேலாளர் பிரிட்டோ மற்றும் அருண் என்ற அழகர்சாமி மீது மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிலிண்டர் வெடித்து விபத்து

மதுரை: யாகப்பா நகரில் வசிப்பவர் கருணாநிதி. அருகில் வசிக்கும் அருண் 30, வீட்டு காஸ் சிலிண்டரை வர்த்தக சிலிண்டராக மாற்றி கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். அப்படி காஸ் மாற்றும்போது வெடித்ததில் கருணாநிதி வீட்டு பொருட்கள் சேதமுற்றன. அருண் கைது செய்யப்பட்டார்.

பெயர் இல்லாததால் தற்கொலை

மதுரை: திருப்பாலை பூமிநாதன் 68. உறவினர் வீட்டு திருமண பத்திரிக்கையில் இவரது பெயர் இல்லாததால் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கஞ்சா கடத்திய மூவர் கைது

திருமங்கலம்: சிந்துபட்டி அருகே பிச்சம்பட்டி பகுதியில் ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். நாகமலை புதுக்கோட்டை கண்ணன் 25, ஆட்டோ டிரைவர் விருமாண்டி 24, பிரகாஷ் 25, ஆகியோர் பிச்சம்பட்டி சரத்குமாரிடம் 2 கிலோ கஞ்சாவை விற்க வாங்கி வந்தது தெரிந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். சரத்குமாரை தேடி வருகின்றனர்.

தொடர் திருட்டு

மேலுார்: பேங்க் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சக்தி மாரியம்மன் கோயில் உண்டியல் பணம் திருடப்பட்டது. பாப்பாகுடி பட்டி அயோத்தியின் 60, ஓட்டலில் ரூ.45 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். திருவாதவூர் ராஜமாணிக்கம் கடையில் 15 அலைபேசிகள் திருடப்பட்டன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊரணியில் மூழ்கி சிறுவன் பலி

செக்கானுாரணி: கொக்குளம் ஒத்தபட்டி பிச்சைமணி மகன் ஆதி 13. மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். திருமங்கலம் இந்திரா காலனி பாட்டி வீட்டிற்கு வந்தார். வெளியில் சென்றவர் திரும்பவில்லை. கீழ உரப்பனுார் இந்திரா காலனி ஊரணியில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

சிந்துபட்டி: தும்மக்குண்டு அருகே கரிசல்பட்டி மாயன் 35, டூவீலரை போலீசார் சோதனையிட்டபோது 47 மதுபாட்டில்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைதுசெய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அலைபேசிகள் திருட்டு

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஹைதர் அலி 35. நான்கு வழிச்சாலையில் அலைபேசி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து 10 அலைபேசிகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊராட்சி துணைத் தலைவர் பலி

வாடிப்படடி: துவரிமான் லட்சுமணன் 62. ஊராட்சி துணைத் தலைவர். நேற்று அதிகாலை துவரிமான் கண்மாய் அருகே நான்கு வழிச்சாலையில் 'வாக்கிங்' சென்றபோது திருமங்கலம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று மோதி இறந்தார்.

மாணவர் தற்கொலை

சோழவந்தான்: குருவித்துறை உஞ்சிதேவர் மகன் ஸ்ரீதர் 20. கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர். கபடி விளையாடிய போது காலில் ஜவ்வு கிழிந்து வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆக.,21ல் பூச்சி மருந்து குடித்தவர் மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார்.

வியாபாரி பலி

பாலமேடு: மாணிக்கம்பட்டி முருகேசன் 50. நேற்று முன்தினம் முடுவார்பட்டியில் கொய்யா பழம் விற்றுவிட்டு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். வெள்ளையம்பட்டி அருகே வாகனம் மோதி இறந்தார்.

1550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலம்: கீழக்கோட்டை ஜெயபாண்டி ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி பாலீஷ் செய்யப்பட்டு கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக எஸ்.பி., பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையிட்டனர். ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்த 1550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மில் உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

பெண் ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி

உசிலம்பட்டி: தாலுகா போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பூங்கா 46. கணவர், 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் ஜன.,21ல் இறந்தார். இவரது 1997 பேட்ஜ் போலீசார் 2552 பேர், ரூ.12 லட்சத்து 76ஆயிரத்து 500 திரட்டி பூங்கா குடும்பத்திற்கு வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X