புதுடில்லி : அடிப்படை கட்டமைப்பு துறையில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், தேசிய பணமாக்குதல் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக அடுத்த நான்கு ஆண்டுகளில், 6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பங்கு விலக்கல் கொள்கைப்படி, பொதுத் துறையைச் சேர்ந்த நலிவடைந்த நிறுவனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுத் துறையில் மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாகவும் நிதி திரட்டப்படுகிறது. இந்த கொள்கைப்படி நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 'தேசிய சொத்துக்களை பணமாக்குதல்' என்ற புதிய திட்டத்தை
அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடிப்படை கட்டமைப்பு துறையில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்
படுத்தப்படுகிறது.
இதில் பொதுத் துறை நிறுவனங்களின் நிலங்கள் விற்கப்படுமா என்ற கேள்விக்கு, 'கிடையாது' என்பது தான் என் பதில். அதேசமயம் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க புதிய திட்டம் உதவும். அதாவது பொதுத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், முதலீடுகளும் அதிகரிக்கப்படும். இந்த வகையில் கிடைக்கும் தொகை, அடிப்படை கட்டமைப்பு துறையில் மேலும் முதலீடு செய்ய பயன்படுத்தப்படும்.
பொதுத் துறை நிறுவன சொத்துக்களின் உரிமை அரசிடமே இருக்கும். பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின், அரசிடம் இருந்து பெற்ற பங்கை கட்டாயம் திரும்ப அளிக்க, புதிய திட்டத்தின் விதிமுறைகள் வழி
வகுக்கின்றன.
பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்கனவே முதலீடு செய்து, அவற்றின் சொத்து மதிப்பிற்கேற்ற பயனை முழுமையாக பெறாமல் உள்ள திட்டங்களில் மட்டுமே தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.பொதுத் துறை நிறுவன சொத்துக்களின் மதிப்பிற்கேற்ற பயனை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ள, இதுவே சரியான தருணம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த சொத்துக்களில் அதிக அளவில் முதலீடுகள் குவியவும், மாற்று வகை முதலீடுகளை ஊக்குவிக்கவும் தேசிய சொத்து ஆக்கல் திட்டம் உதவும். இந்த திட்டத்தில் பயணியர் ரயில், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை, மொபைல் கோபுரம், மின் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளின் சொத்து விற்பனை வாயிலாக, அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும். சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்களும் இதில் அடக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் பங்களிப்பு முக்கியம்
எந்த ஒரு துறையிலும் மிகச் சிறந்த செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கு தனியார் பங்களிப்பு மிகவும் முக்கியம். இந்த வகையில் அடிப்படை கட்டமைப்பு துறையில் அரசு மற்றும் மக்கள் மேற்கொண்ட முதலீட்டின் முழு பயனையும் பெற, மத்திய அரசின் புதிய திட்டம் உதவும். - அமிதாப் காந்த் தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE