பார்க்கத்தானே போறோம், இந்த 'கிளப்'களோட ஆட்டத்தை!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021
Advertisement
''ஆளும் கட்சிஎம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களைப் பார்க்க, ஊராட்சி செயலர்கள் பலரும், வரிசை கட்டி நிக்கிறாங்களாம்'' என்று, 'பீடிகை'யுடன் பேச்சைத் துவங்கினாள் சித்ரா.''ஆமாக்கா, பலரும், கார், பங்களானு 'செட்டில்' ஆகிட்டாங்களாம்; அசுர வளர்ச்சியைப் பார்த்து, பி.டி.ஓ.,க்கள், கலெக்டர்ட்ட விஷயத்தை சொன்னதும், 15 வருஷத்துக்கு மேல ஒரே ஊராட்சில வேலை பாக்கறவங்கள, 'டிரான்ஸ்பர்'
 பார்க்கத்தானே போறோம், இந்த 'கிளப்'களோட ஆட்டத்தை!

''ஆளும் கட்சிஎம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களைப் பார்க்க, ஊராட்சி செயலர்கள் பலரும், வரிசை கட்டி நிக்கிறாங்களாம்'' என்று, 'பீடிகை'யுடன் பேச்சைத் துவங்கினாள் சித்ரா.

''ஆமாக்கா, பலரும், கார், பங்களானு 'செட்டில்' ஆகிட்டாங்களாம்; அசுர வளர்ச்சியைப் பார்த்து, பி.டி.ஓ.,க்கள், கலெக்டர்ட்ட விஷயத்தை சொன்னதும், 15 வருஷத்துக்கு மேல ஒரே ஊராட்சில வேலை பாக்கறவங்கள, 'டிரான்ஸ்பர்' செய்ய சொல்லீட்டாராம்'' என்றாள் மித்ரா

''விவரமா பேசுற... சம்பாதிச்ச ஊரை விட்டு போக மனசு வருமா... எவ்ளோ செலவானாலும், ஊரை விட்டுப் போகக்கூடாதுனு, ஊராட்சி செயலருங்க, உறுதியா இருக்காங்களாம்; அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும், 'டிரான்ஸ்பர்' செய்ய முட்டுக்கட்டை போடாம இருந்தா சரிதான்'' என்றாள் சித்ரா, ஆதங்கத்துடன்.


இலை கட்சி சலசலப்பு



''போன வாரம், பா.ஜ., மத்திய அமைச்சர் முருகன், 'மக்கள் ஆசி' யாத்திரைக்காக திருப்பூர் வந்தார்ல... எந்தவொரு இடத்திலயும், அ.தி.மு.க., நிர்வாகிங்க கலந்துக்கலையாம். காங்கயத்துல மட்டும், வெள்ளகோவில் வி.ஐ.பி., கலந்திருக்காரு. இது, இலைக்கட்சிக்குள்ள சலசலப்பை ஏற்படுத்தியிருக்காம்,'' என்று அடுத்த சங்கதிக்கு தாவினாள் மித்ரா.

''பா.ஜ., நிகழ்ச்சில, அ.தி.மு.க., நிர்வாகிங்க போக தேவையில்லைதான். ஆனா, வெங்கடேசன், துணிச்சல்காரர் தான்,'' என்ற சித்ரா, ''அந்த தொகுதியோட மாஜி எம்.எல்.ஏ., சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு வந்திருக்காரு. அவரை யாரும் கண்டுக்கவே இல்லையாம். அவரா போய், கலெக்டர்ட்ட எலுமிச்சம்பழம் கொடுத்து அறிமுகமாகியிருக்காரு,'' என்றாள் சித்ரா.

''அரசா இருந்தவர் 'தனி'யாளா ஆயிட்டார்னு சொல்றீங்களாக்கா... பதவில இருந்தாதான் மதிப்பு' என்ற மித்ராவிடம், கலகலப்பு.


புரோக்கர் 'அட்ராசிட்டி'



''எல்லா இடத்துலயும் புரோக்கருங்க தலையீடு அதிகமாயிடுச்சு. தெற்கு பார்த்த வட்டார போக்குவரத்து அலுவலகத்துல, போன வாரம், ஒரு கல்லுாரி மாணவர் லைசென்ஸ் விஷயமா, புல்லட் பைக்கில் வந்திருக்காரு. அவரோட வண்டீல இருந்த சாவியை பிடுங்கின ஒரு புரோக்கரு, ெஹல்ெமட் போடாம வந்திருக்கீங்க. உங்கள பெரிய அதிகாரிட்ட கூட்டிட்டு போய்,10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வைக்கிறேனு மிரட்டி இருக்காரு; பையன் மிரண்டு போயிட்டாராம். புரோக்கர், பெரிய ஆபீசரின் உதவியாளர்னு வேற சொல்லிகிட்டு இருக்காராம்,'' என்று ஆச்சர்யத்துடன் சொன்னாள் மித்ரா.

''ஆமா மித்து. எங்க பக்கத்து தெருவுல இருக்க பாபு அண்ணா கூட இத பத்தி என்கிட்ட போன வாரம் பேசினார். எல்லா வட்டார போக்குவரத்து ஆபீஸ்லயும், புரோக்கருங்க தலையீடு அதிகமாயிடுச்சாம். விலைவாசிக்கேத்த மாதிரி, கமிஷனும் இரட்டிப்பு ஆகிடுச்சுன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.


வசூல் மும்முரம்



''இதே மாதிரிதான், அவிநாசி தாலுகா ஆபீசுக்கு எதிர்புறம், ஆளுங்கட்சிய சேர்ந்த சிலரு ஒரு ஆபீஸ் திறந்து வெச்சு, இலவசமா வீட்டுமனைப்பட்டா வாங்கி தர்றோம்னு சொல்லி, ஏழைங்ககிட்ட விண்ணப்பம் வாங்கிட்டு, 300 ரூபாய் வசூல் பண்றாங்களாம். இதுதொடர்பா, நடவடிக்கை எடுக்கணும்னு, அவிநாசி போலீஸ்ல கூட சிலரு புகாரு கொடுத்திருக்காங்க. ரெவின்யூ அதிகாரிகள்கிட்ட கேட்டப்போ, 'எங்களுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'னு சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''போன ஆட்சில, கூட்டுறவு துறைல உதவியாளர் வேலைக்கு, தேர்வு எழுதினதோடு மட்டுமில்லாம, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் லஞ்சம் கொடுத்து, நிறைய பேரு வேலைக்கு சேர்ந்தாங்க. கூட்டுறவு சொசைட்டில வேலைக்கு சேர்ந்தவங்களுக்கு வேலை நேரம் அதிகம்; சம்பளம் குறைச்சலாம். ஆனா, கூட்டுறவு வங்கி மற்றும் பெரிய சங்கத்துல வேலைக்கு சேர்ந்தவங்களுக்கு, வேலை நேரம் குறைவு; சம்பளம் அதிகமாம். இதனால, சொசைட்டில வேலைக்கு சேர்ந்தவங்க கடுப்பாகி, 'எல்லாருக்கும் ஒரே வேலை நேரம்; ஒரே சம்பளம் நிர்ணயிக்கணும்னு, போராட ஆரம்பிச்சுட்டாங்களாம்'' என்று புதிய தகவலை பகிர்ந்தாள் சித்ரா.

''கப்பல்ல வேலை; பத்தாயிரம் ரூபா சம்பளம்ங்கற கதைதான் இது... முதல்ல, வேலைக்கு சேரும்போதே தெரியலியா...'' என்று கேட்ட மித்ரா, ''கூட்டுறவு வங்கிகள்ல நகைக்கடன் தள்ளுபடி செய்றப்ப, வங்கி உறுப்பினரா இல்லாம, நகைக்கடன் வாங்கினவங்கிகிட்ட, நகைக்கடன் தள்ளுபடி ஆகணும்னா, 1,120 ரூபாய் 'டெபாசிட்' கட்டி 'பாஸ்புக்' வாங் கணும்னு, வங்கி நிர்வாகிங்க கறாரா சொல்லிட்டாங்களாம். நகைக்கடன் தள்ளுபடியானா சரீன்னு, பலரும் 'டெபாசிட்' கட்ட ஆரம்பிச்சுட்டங்களாம்,'' என்றாள்.


கிளப்கள் தயார்



''சிட்டிக்குள்ள, சட்ட விரோதமா இயங்கிட்டு இருந்த கிளப்களை இழுத்து மூடினாங்க... இப்ப திரும்பவும், திறப்பு விழா நடத்த, அரசியல் செல்வாக்குடன் சிலர் காய் நகர்த்திட்டு இருக்காங்களாம்; 'கிரீன் சிக்னல்' கிடைச்சுருச்சுனு சொல்றாங்க'' என்று வெளிப்படையாக பேசினாள், மித்ரா.

''இந்த மாதிரி கிளப்கள்ல, சூதாட்டம் விடிய விடிய நடக்கும். லட்சக்கணக்குல பணம் புரளும். ம்ம்ம்... கிளப்களோட ஆட்டத்த இனிமேல் தான் பாக்க போறோம்னு சொல்லு... அரசியல் செல்வாக்கு இருந்தா தப்பு கூட சரியாயிடுது...'' என்று 'நியாயம்' கற்பித்தாள் சித்ரா.

''சிட்டி போலீஸ் அதிகாரி, மக்களை ரொம்ப நேரம் காக்க வச்சுடறாராம். மாயமானவங்கள, அவங்க குடும்பத்தினர்ட்ட ஒப்படைக்கிற நிகழ்ச்சியின்போது, எல்லோரும் வந்த பின்னாடி, ஒரு மணி நேரம் கழிச்சு தான், அவரு வந்திருக்காரு. அதிகாரியை பார்க்க, மனு கொடுக்க ஆபீசுக்கு போனாலும், ரொம்ப நேரம் காக்க வச்சுடறாராம்'' என்ற மித்ரா, ''இதுதான் அதிகாரியோட 'கெத்து'னு நெனச்சுக்கறாரோ, என்னவோ'' என்று விசனப்பட்டாள்.

''லிங்கேஸ்வரர் ஊர்ல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அளவுக்கு அதிகமா மாடுகளை ஏத்திட்டு வந்த லாரியை பறிமுதல் பண்ண போலீஸ்காரங்க, வழக்குப்பதிவு செஞ்சாங்க. லாரியை விடுவிக்க, கோர்ட் உத்தரவும் வந்துடுச்சு. ஆனா, பெரிய ஆபீசரோட ஜீப்புக்கு டீசல் அடிக்க, 4,000 ரூபாய் கொடுங்கன்னு, லாரி உரிமையாளர்ட்ட கேட்டிருக்காங்க போலீஸ்காரங்க. கொடுக்க முடியாதுன்னு, லாரி உரிமையாளர் சொல்ல, லாரியை விடுவிக்காம அலைக்கழிச்சிருக்காங்க. ஒரு வக்கீல் தலையிட்ட பிறகுதான், லாரியை விடுவிச்சாங்களாம்,'' என்ற சித்ரா, ''பணம் பிடுங்கறதுக்காக எதுக்குத்தான் இப்படி அலையறாங்களோ, தெரியல'' என்று அங்கலாய்த்தாள்.


இலை - சூரிய கூட்டணி




''விதி மீறி சரக்கு விக்கிற 'பார்'களுக்கு அடிக்கடி 'ரெய்டு' போற போலீஸ்காரங்க, ஆளுங்கட்சிக்காரங்க நடத்துற 'பார்'னா ஓடி ஒளிஞ்சுக்கறாங்களாம். ஊத்துக்குளில, 'பார்' நடத்தறவங்ககிட்ட இருந்து, 'விதிமீறி மது விக்க மாட்டோம்'னு எழுதி வாங்கியிருக்காங்க. ஆளும் கட்சி 'ஆசி' பெற்ற 'பார்'காரங்களுக்கு இதுல விதிவிலக்காம்,'' என்றாள், விழிகளை விரித்தவாறே, மித்ரா.

''பல்லடத்துல, பால் பூத்ல சரக்கு வித்தாங்கன்னு சொல்லி ஒருத்தர் மேல எப்.ஐ.ஆர்., போட்டாங்கள்ல. பூத், சூரிய கட்சிக்காரர் பேர்ல இருக்குனு போன வாரம் சொன்னேன்ல. அவரு, இலை கட்சியை சேர்ந்த ஒருத்தருக்கு உள் வாடகைக்கு விட, அவரு, இன்னொருத்தருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்காராம். தெரியுமா?' என்று வினா தொடுத்தாள் சித்ரா.

''அடடே, இலை - சூரிய கூட்டணியா... கேக்கவே ஆச்சர்யமா இருக்கே'' என்று வியந்தாள் மித்ரா.

''இவங்க 'கூட்டணி தர்ம'த்துல, நடந்த தப்புக்கு, யாரு பொறுப்புங்கற குழப்பம் வந்துடுச்சு'' என்று 'புதிர்' விடுவித்தாள் சித்ரா.

''பல்லடத்துல, இத்தன நாளா வெறும் கிராம், கிலோ கணக்குல குட்கா பறிமுதல் பண்ண போலீஸ்காரங்க, இப்போ டன் கணக்குல பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பிடிபட்ட குடோன்ல, நாலு வருஷமாவே குட்காவை பதுக்கி வச்சு விக்கிறாங்களாம்; போலீஸ்காரங்களுக்கு, திடீர்ன்னு எப்படி ஞானோதயம் வந்துச்சோ'' என்று ஆச்சர்யப்பட்டாள் மித்ரா.

''மேலதிகாரி கொடுக்கற பிரஷர்ல, நல்லது நடக்குது... இதுல ஒரு ஆச்சர்யமும் இல்ல'' என்று, மித்ராவுக்கு புரியவைத்தாள், சித்ரா.


குப்பை பிரச்னை



''திருப்பூர்ல, தினமும் டன்கணக்கா குப்பை குவியுது. ஆனா கொட்றதுக்கு இடம் இல்லாம, எல்லா இடங்கள்லயும் குப்பை தேங்கியிருக்கு. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்கிற மாதிரி தெரியல...'' என்றாள் மித்ரா.

''நீ சொல்றது சரிதான். ஆனா, சேகரிக்கிற குப்பைல பெரும்பாலும் மக்காத குப்பைதான் இருக்கு... ஒருமுறை பயன்படுத்தற பிளாஸ்டிக்குக்கு தடைங்கறது பெயரளவுல இருக்கற வரைக்கும் குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கறது கஷ்டம்தான்'' என்று, சித்ரா விளக்கினாள்.

''அக்கா... ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டுத்தர்றேன்'' என்ற மித்ராவிடம், 'ஒனக்கு டீ வேணும்கறப்ப தான், எனக்கு போட்டுத்தரணும்னு தோணுது'' என்று சித்ரா கூற, இருவரும் கலகலக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X