கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை தடை கோரிய மனு மீது

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மேற்கொண்டு விசாரணை நடத்த, போலீசாருக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை, வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், போலீஸ் சாட்சியாக சேர்க்கப் பட்டு உள்ள, கோவையை சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனு: கோடநாடு வழக்கில் குற்றம்

சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மேற்கொண்டு விசாரணை நடத்த, போலீசாருக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை, வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், போலீஸ் சாட்சியாக சேர்க்கப் பட்டு உள்ள, கோவையை சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனு: கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை எனக்கு தெரியும்.இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும் படி, பல தரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.

அரசு தரப்பில் 41 சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை, இன்னும் துவங்கவில்லை. நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடந்து வருகிறது.உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைவாக முடிக்க, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவது மட்டுமல்லாமல், மேல் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் ஆஜராகி, ''சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல், குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்து விட்டு, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக, நீலகிரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். ''நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அடுத்த நாளே விசாரணைக்கு அழைத்துள்ளனர்,'' என, வாதாடினார்.


நடத்த முடியாது

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ''குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்ற வழக்கின் விசாரணை துவங்கிய பின், குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த முடியாது.''நீதிமன்றத்தின் அனுமதியின்றி, சயானிடம் போலீசார் மறு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ''அனுமதி பெற்றுத்தான், மறுவிசாரணை நடத்தப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் தவறான தகவலை அளித்துள்ளார்,'' என, குற்றம் சாட்டினர்.

அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை முழுமையாக கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ''அந்த நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக, நீலகிரி நீதிமன்றத்தில் போலீசார், 'மெமோ' தாக்கல் செய்தனர். அது நிராகரிக்கப்படவில்லை. ''வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர், விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என, நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளனர்,'' என்று தெரிவித்தார்.

போலீஸ் தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா வாதாடியதாவது: மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை. மனுதாரர் அனுபவ் ரவி, போலீஸ் சாட்சியம் மட்டுமல்ல; வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நெருக்கமானவர். போலீசார் விரிவுபடுத்தப்பட்ட விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.அதன் மீது நீதிமன்றம் முடிவெடுக்கப் போகிறது.

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணமடைந்தது, சிலர் விபத்துக்குள்ளானது போன்றவை, முறையாக விசாரிக்கப்படவில்லை; தற்போது முழுமையாக விசாரிக்கப் படுகிறது.அந்த விசாரணைக்கு அழைத்தால், ஆஜராகி விளக்கம் அளிக்காமல், மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வேண்டுமெனில், அவரது வழக்கறிஞர் துணையுடன், போலீஸ் நிலையத்தில் ரவி ஆஜராகலாம்.இவ்வாறு அவர் வாதாடினார்.


நோக்கம் இல்லை

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'விசாரணையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றால், எப்போது தான் நீலகிரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, கேள்வி எழுப்பினார்.அதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், 'தேவை இல்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.

விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை முடிக்க, எட்டு வாரம் அவகாசம் தேவைப்படும்' என தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வெள்ளிக் கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X