காஞ்சிபுரம் : நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும், ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்க்கும் பணியை, நகராட்சி நேற்று துவக்கியது.
காஞ்சிபுரம் நகராட்சியில், 141 பேர் நிரந்தர, 350 பேர் தனியார் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு, எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ, அந்தந்த வங்கி மூலம் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் சேருவதற்காக விண்ணப்பம் நேற்று கொடுக்கப்பட்டது.
இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு தேசிய ஆணை குழு தலைவர் ஆய்வுக்கு வந்தபோது, துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்து இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை உடனடியாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இதனால் துப்புரவு பணியாளர்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள 'ஜீவன் ஜோதி பீமா யோசனா' மற்றும் 'சுரக் ஷா பீமா யோசனா' ஆகிய திட்டத்தின் மூலம் பாலிசி எடுப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
முதலில் உள்ள திட்டத்தில் ஆண்டுக்கு 330 ரூபாய்; இரண்டாவது திட்டத்தில், ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் ஊதியத்தில் இருந்து அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.தொழிலாளர்களுக்கு விபத்தால் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு கிடைக்கும். பஞ்சாப் தேசிய வங்கியில், கணக்கு உள்ளவர்களுக்கு அதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினர்.