மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் தேக்கம்! விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுமா?| Dinamalar

தமிழ்நாடு

மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் தேக்கம்! விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : ஆக 25, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலத்தில் விடப்படாமல் மக்கி வீணாகிறது. வாகனங்களின் பராமரிப்பு நிலை கருதி விரைவில் ஏலம் விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம் வழியாக வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்துவதைத் தடுப்பதில் போலீசார் தீவிரம்
மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் தேக்கம்! விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுமா?

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலத்தில் விடப்படாமல் மக்கி வீணாகிறது. வாகனங்களின் பராமரிப்பு நிலை கருதி விரைவில் ஏலம் விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் வழியாக வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்துவதைத் தடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையொட்டி, மாவட்ட எல்லைப் பகுதிகளில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுகின்றனர்.இந்த சோதனைகளில், சட்டவிரோதமாக மது கடத்தல், விற்பனை செய்தல், சாராயம் கடத்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம், கனரக வாகனங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

இந்த வாகனங்கள், அரசின் மோட்டார் வாகன பிரிவு பொறியாளர் மூலம் தொகை நிர்ணயிக்கப்பட்டு, மாதந்தோறும் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டு வந்தது.கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வாகன ஏலத்திற்கு இடைக்கால தடைவிதித்து வானுார் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, மதுகடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விட முடியாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப்படை மைதானம் மற்றும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, 700க்கும் மேற்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, மழை, வெயிலில் மக்கி வீணாகி வருகிறது. இதனால், அந்த வாகனங்களுக்கான மதிப்பு குறைந்து அதிக தொகைக்கு ஏலம் போகாமல் போகும் நிலை உள்ளது.இந்த வாகனங்களை போலீசார் காவல் நிலையங்களில் வைத்து, பராமரிக்க இடமின்றி பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஏலம் தொடர்பாக வானுார் கோர்ட்டில் உள்ள வழக்கில் கடந்த ஆண்டு இறுதியில் போலீசார் தீர்வு கண்டுள்ள நிலையில், கொரோனா ஊரடங்கால் ஏலத்தை போலீசார் தள்ளிப்போட்டு வருகின்றனர். வாகனங்களுக்கான பராமரிப்பு நிலையைக் கருத்தில் கொண்டும், போலீஸ் நிலையங்களில் இடமில்லாத சூழலைக் கருதியும் காவல் துறை உயர் அதிகாரிகள் விரைவாக மதுவிலக்கு வழக்கு வாகனங்களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விட நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம், ஊரடங்கு ஆகிய பல சூழலால் ஏலம் நடத்த முடியாமல் போனது. முதல் கட்டமாக 200 வாகனங்களை விரைவில் பொது ஏலத்தில் விட ஏற்பாடு நடக்கிறது. தொடர்ந்து மற்ற வாகனங்களும் பராமரிப்பு நிலையை சோதனை செய்து, ஏலத்தில் விடப்படும் என தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X