திருச்சி:மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலுக்கு, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இரண்டு புதிய இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி, ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 112 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மலை ரயிலுக்கு, ஸ்விட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டது.
தற்போது, திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில், 8.50 கோடி ரூபாய் செலவில் நிலக்கரி நீராவி இன்ஜின் ஒன்றும்; 9.80 கோடி ரூபாய் செலவில் பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின் ஒன்றும் தயாரித்து, ஊட்டி மலை ரயில் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.மலை ரயில் இன்ஜினுக்கான 3,600 பாகங்களில் 1,400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவை.
எஞ்சிய பாகங்கள், கோவை உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு, புதிய இன்ஜின்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. புதிய மலை ரயிலுக்கான இன்ஜின்கள், சில நாட்களுக்கு முன் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. புதிதாக தயாரிக்கப்பட்ட இரண்டு ரயில் இன்ஜின்களும், மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை ரயிலுடன் இணைத்து பயணத்தை துவங்க உள்ளதாக, பொன்மலை ரயில்வே பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE