தேனி:''கடந்த ஆட்சியில் விவசாயிகள் பக்கம் நின்று போராடிய தி.மு.க. தற்போது நேர்மாறாக செயல்படுவது சரியல்ல,'' என, விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
வருஷநாடு, மேகமலையில் வன விவசாயிகளை வனத்துறை தடுப்பதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
அதில் பங்கேற்ற மாநில விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் வன உரிமை சட்டம் நிறைவேற்றி 15 ஆண்டுகள் ஆகியும் முந்தைய அரசும், தற்போதுள்ள அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. இச்சட்டம் முறையாக அமல்படுத்தினால் விவசாயிகளை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இச்சட்டத்தில் பலன்பெற வேண்டியவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
சட்டசபையில் வனத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் சம்பந்தம் இல்லாமல் தேனி மாவட்ட வன விவசாயிகளை வெளியேற்றுவோம் என பேசியது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்களில் விவசாயிகள் பக்கம் நின்று தி.மு.க. போராடியுள்ளது. இப்போது நேர்மாறாக நடப்பது சரியல்ல. உரிமை கோரிய மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை ஒருவரை கூட வெளியேற்ற முடியாது என சட்டம் கூறுகிறது. சட்டத்திற்கு எதிராக செயல்பட முயற்சித்தால் அதனை விவசாயிகள் சங்கம் தடுத்து நிறுத்துவோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE