மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்வு: மக்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்வு: மக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 25, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் மானாமதுரை முதல் இடத்தில் இருந்தது. மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் விரிவடைந்து வரும் நிலையில் மானாமதுரையை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர்

மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் மானாமதுரை முதல் இடத்தில் இருந்தது.

மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் விரிவடைந்து வரும் நிலையில் மானாமதுரையை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.நேற்று சட்டசபையில் மானாமதுரையை நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி கூறுகையில், மானாமதுரை நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மானாமதுரையில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பூங்காக்கள், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி,வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டிய மாங்குளம்,கீழமேல்குடி,கல்குறிச்சி,கால்பிரவு ஆகிய ஊராட்சியிலுள்ள சில பகுதிகள் நகராட்சியில் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.பாலகுருசாமி,வர்த்தகர் சங்க தலைவர்: நகராட்சியாக தரம் உயர்த்தியதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கிராம பகுதிகள் நகராட்சி எல்லைக்குள் வருவதால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் அதிகளவில் வியாபாரம் நடக்க வாய்ப்புள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். மானாமதுரை எல்லையை ஒட்டி சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் அதுவும் விரிவடைய வாய்ப்புள்ளது.நல்லதுரை, ரியல் எஸ்டேட் பிரமுகர், மானாமதுரை: பல ஆண்டுகளாக மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் விடுத்த கோரிக்கையின் பலனாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

மானாமதுரை பேரூராட்சியை ஒட்டியுள்ள கிராம பகுதிகள் நகராட்சியோடு இணைவதை அடுத்து கிராம பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பும் உயரும்.மனை வாங்குவது விற்பது அதிகரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.மணிவண்ணன், பட்டதாரி, மானாமதுரை: மானாமதுரையில் மாணவர்களின் வசதிக்காக அரசு கலைக்கல்லுாரி வேண்டுமென்று பல ஆண்டுகளாக மாணவர்களும்,அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து விரைவில் மானாமதுரையில் அரசு கலைக்கல்லுாரி அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

கிராம பகுதிகள் நகராட்சியோடு இணைவதால் கிராம புற மாணவர்களும் ஆங்கில வழி கல்வி கற்க வசதியாக இருக்கும்.மாயழகு, பர்னிச்சர் கடை உரிமையாளர், உடைகுளம்: மானாமதுரை பகுதியை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகள் மானாமதுரை பேரூராட்சி எல்லையை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு இனி தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,சாலை,தெருவிளக்குகள் போன்றவை விரைவில் கிடைக்கும். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் வரி வருவாய் கூடுதலாக இருந்தாலும் தேவையான வசதிகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X