திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 24,296 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'கேரளாவில் கோவிட் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்று கிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்றார்.