சென்னை: ‛‛வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையே தொடரும்,'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது கொரோனா 2வது அலை குறைந்துள்ள நிலையில் 3வது அலையை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆடி மாதம் வழிபாட்டுத் தலங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 3 வாரமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் கோயில் வாசலில் வைத்து திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த திங்கள் முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் செப்.,1ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நடத்தும் மதுக்கூடங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில், தற்போது ஏற்கனவே அறிவித்தது போல கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE