பெங்களூரு-"பெங்களூரில் உருமாறிய தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே மூன்றாவது அலை துவங்கியுள்ளது என கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என, பெங்களூரு மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரந்தீப் தெரிவித்தார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:உருமாறிய தொற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில், கொரோனா மூன்றாவது அலை எழக்கூடும் என வல்லுனர் குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர். உருமாறிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், மூன்றாவது அலை துவங்கியுள்ளதாக கூறலாம்.மாநில அரசின் தகவலின்படி, வெறும் மூன்று பேருக்கு மட்டும், டெல்டா தொற்று ஏற்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், மூன்றாவது அலை ஏற்பட்டதாக கூற முடியாது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரில் ஜினோம் ஸ்வீக்வென்சிங் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும், 10 சதவீதம் மாதிரிகள், இத்தகைய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த புதிய உருவாறிய தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.பெங்களூரில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும்படி, அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை.விதிமுறைப்படி எந்த நபரும், கொரோனா தடுப்பூசி பெற்ற பின், கட்டாயமாக அரை மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும். எனவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடவில்லை.தடுப்பூசி மொபைல் வாகனங்கள் மூலம், தடுப்பூசி போடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை துவங்குவோம். முக்கியமான இடங்களில், முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படும்.திடீரென இரண்டாவது அலை அதிகரித்ததால், பிரச்னை ஏற்பட்டது. இம்முறை அப்படி நடக்காமல், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தியுள்ளோம்.
எனவே, தொற்று பரவும் அளவு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.கொரோனா பரிசோதனை அறிக்கையை, 24 மணி நேரத்தில் அறிக்கும்படி, ஆய்வகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை அளிக்க தாமதிக்கும் ஆய்வகங்களுக்கு, கட்டணத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். தவறான அறிக்கை அளித்தால், ஒரே எண்ணில் மூன்று, நான்கு அறிக்கை அளிக்கும் ஆய்வகங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சில ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE