குரோம்பேட்ட--தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு, குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் பகுதிகளை சேர்ந்த, குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்படி செய்வதால் மட்டுமே, இப்பகுதிகள் வேகமாக வளர்ச்சியடையும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.
''பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, தனியாக மாநகராட்சி உருவாக்க வேண்டும். இல்லையெனில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்.இப்படி செய்தால் மட்டுமே, இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஏற்கனவே, தனியாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில், எந்த அடிப்படை வசதியும் மேம்படவில்லை. அதே நிலைமை, தாம்பரம் மாநகராட்சியிலும் ஏற்படும் என அஞ்சுகிறோம்.அதனால், தாம்பரத்தை விட அனைத்து வகையிலும் சிறப்பு பெற்ற, பல்லாவரத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதே சிறந்த தீர்வு.
வி. சந்தானம், 83, தலைவர்மக்கள் விழிப்புணர்வு மையம்,குரோம்பேட்டை.
தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, பல்லாவரம் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பல்லாவரம் நகராட்சி பகுதிகள், சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பெரிய துணிக்கடை, ஓட்டல்கள், நகைக்கடை என, பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களது கிளைகளை தொடங்குகின்றன.இப்படிப்பட்ட சூழ்நிலையில், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று, அரசு எப்படி அறிவித்தது என்பது தெரியவில்லை.
பல்லாவரத்தை, சென்னையுடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், நகராட்சியாகவே இருப்பது நல்லது.லயன் எஸ்.எம். கோவிந்தராஜன், 53, செயலர்,பட்டேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், குரோம்பேட்டை.சென்னை மாநகராட்சி கமிஷனராக பொதுவாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவது வழக்கம். சில மாநகராட்சிகளில், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு இணையான அதிகாரிகளை, கமிஷனர்களாக நியமிக்கின்றனர். இப்படி செய்வதால், அடிப்படை வசதிகளை முறையாக செய்ய முடிவதில்லை. ஆவடி மாநகராட்சி ஆன பிறகும் கூட, அங்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. எனவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கீழ் செயல்படும், சென்னையுடன், பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இணைப்பது மட்டுமே, சிறந்த செயல்பாடாக இருக்கும். தமிழக அரசு, உடனடியாக இதை பரிசீலனை செய்ய வேண்டும்.
டி.எஸ்.சிவசாமி, 82,கூடுதல் நகராட்சி நிர்வாக இயக்குனர் (ஓய்வு)தலைவர்,
ஒருங்கிணைந்த நகர வளர்ச்சிக்கான சங்கங்களின் பேரமைப்பு.தாம்பரம் மாநகராட்சியுடன், பல்லாவரத்தை இணைப்பதற்கு பதில், சென்னையுடன் இணைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். தாம்பரத்தை விட, பல்லாவரத்தில் மக்கள் தொகை அதிகம்.புதிய மாநகராட்சி என்று அறிவிப்பு வந்தாலும், அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகமே. பெயரை தான் மாநகராட்சி என்று மாற்றுவார்களே தவிர, வழக்கம் போல், அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பர்.அதே நேரத்தில், சென்னையுடன் இணைத்தால், வசதிகள் உடனுக்குடன் செய்வர். உதாரணத்திற்கு, ஆலந்துார் நகராட்சியை, சென்னையுடன் இணைந்த பிறகு, அப்பகுதி அசுர வளர்ச்சியடைந்துள்ளது. தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எம். ஸ்ரீதர், 54, துணை தலைவர்,பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் இணைப்பு மையம்.