மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி; மழை நீர் சேகரிப்புக்கு பள்ளம் தோண்டுகையில் விபரீதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி; மழை நீர் சேகரிப்புக்கு பள்ளம் தோண்டுகையில் விபரீதம்

Added : ஆக 26, 2021
Share
வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார்; இருவர் மீட்கப்பட்டனர்.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராய தெருவில், தனியார் கண் மருத்துவமனை கட்டுமான பணி நடக்கிறது.மருத்துவமனையின் பின்புறம் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்ட பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது.இதில், பழைய

வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார்; இருவர் மீட்கப்பட்டனர்.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராய தெருவில், தனியார் கண் மருத்துவமனை கட்டுமான பணி நடக்கிறது.மருத்துவமனையின் பின்புறம் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்ட பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது.இதில், பழைய வண்ணாரப்பேட்டை, பாலு தெருவைச் சேர்ந்த மேஸ்திரி மணி தலைமையில், வீரப்பன், ஆகாஷ், சின்னத்துரை ஆகியோர், 15 அடி ஆழம், 6 அடி அகலம் அளவில் பள்ளம் தோண்டும் பணியில், நேற்று மதியம் ஈடுபட்டனர்.அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டதில், வீரப்பன், ஆகாஷ், சின்னத்துரை ஆகிய, மூவரும் பள்ளத்துக்குள் சிக்கினர். தகவல் கிடைத்து, செம்பியம், தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், 20க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்தனர். மண் சரிவில் சிக்கிய வீரப்பன், ஆகாஷை உயிருடன் மீட்டனர்.இதில், விழுப்புரத்தை சேர்ந்த சின்னத்துரையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் மண் மேலும் சரியாமல் இருக்க, உறைக்கல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின், சின்னத்துரை மீட்கப்பட்டார்.உடனே, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர்.இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரத்தைச் சேர்ந்த மூவரும், கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இதில் உயிரிழந்த சின்னதுரைக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X