புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ. 2.43 குறைகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
புதுச்சேரி வரலாற்றில் கடந்த ஜூலை 5ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டது. அதன்பின்பு ஓரிரு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102 ஆக உயர்ந்தது. இந்த விலை, கடந்த பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.87 ஆக இருந்தது.
தமிழகத்தில், பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 3 வரை சமீபத்தில் குறைக்கப்பட்டது. அதனால், புதுச்சேரியை விட தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைந்தது. புதுச்சேரியிலும் பெட்ரோல் மீதான வரியை குறைக்க கோரிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
![]()
|
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மீதான வாட் வரியை, 3 சதவீதம் குறைக்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான கோப்பு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெட்ரோல் மீதான வரியை 3 சதவீதம் குறைக்க, கவர்னர் தமிழிசை நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.43 குறையும். புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டர் ரூ. 99.52 ஆகவும், காரைக்காலில் ரூ. 99.30 ஆக விற்பனை ஆகும் என கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.