லெய்ப்சிக் : ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் 'பீட்சா டெலிவரி' செய்யும் வேலை பார்த்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றியவர் சையது அகமது சதாத். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்த இவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். பின் ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சக்சோனி மாகாணத்தில் உள்ள லெய்ப்சிக் நகருக்கு இவர் குடிபெயர்ந்தார்.

அங்கு இவர் டெலிவரி பாய் வேலையை பார்த்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. பீட்சா டெலிவரி செய்ய அவர் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த படங்கள் தன்னுடையது தான் என்பதை அவரே உறுதிபடுத்தி உள்ளார். பணம் இல்லாத காரணத்தால் டெலிவரி பாய் வேலையில் சேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது குறித்து அவர் கூறுகையில் “இவ்வளவு சீக்கிரமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்ந்துவிடும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்றுள்ள சையது சவுதி அரேபியா உள்ளிட்ட 13 நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE