பாட்னா: பீஹாரில், பாம்புகளின் நண்பர் என, அழைக்கப்பட்ட வாலிபர், சமீபத்தில் ரக் ஷா பந்தனையொட்டி அவைகளுக்கு 'ராக்கி' கட்டினார். அப்போது, ஒரு பாம்பு கடித்ததில் அவர் பலியானார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, சரண் மாவட்டம் சப்ராவை சேர்ந்தவர் மன்மோகன், 25. பாம்பு களுடன் நெருக்கமாக பழகிய இவர், அவற்றுடன் ரக் ஷா பந்தன் கொண்டாட முயன்றார். அப்போது, பாம்பு கடித்ததால் பலிஆனார்.இந்த சோக சம்பவம் குறித்த விபரம்:

எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய மன்மோகன், வீடுகளுக்குள் நுழையும் விஷப் பாம்புகளை பிடித்து அகற்றும் சமூகப் பணியை செய்து வந்தார்.பாம்புகள் காயமடைந்தால் அவற்றுக்கும், பாம்பு கடியால் அவதிப்படுவோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார். பாம்புகளின் நண்பர் என அழைக்கப்பட்ட அவர், சிகிச்சை அளிக்க யாரிடமும் பணம் பெறுவதில்லை.
சமீபத்தில் ரக் ஷா பந்தன் கொண்டாடிய மன்மோகன், தன் சகோதரிக்கு மட்டுமின்றி, பாம்புகளுக்கும் ராக்கி கட்டி உள்ளார்.பின், இரு பாம்புகளை கையில் பிடித்து விளையாடியுள்ளார். இந்த காட்சிகளை, வீட்டில் இருந்தவர்கள் 'மொபைல் போனில் வீடியோ' பதிவு செய்து உள்ளனர்.அப்போது, பாம்புகளில் ஒன்று காலில் கடித்ததால் மன்மோகன் பரிதாபமாக பலியானார். அவரது மரணம், அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.