ராஜ்கோட்: குஜராத்தில், அரச குடும்பத்தினர் இடையே, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 400 ஆண்டு கால ராஜ்கோட் சமஸ்தானத்தின் 16வது மன்னராக இருந்த மனோகர்சின் ஜடேஜா 2018ல் இறந்தார்.
நிறுத்திவைப்பு
இதையடுத்து, அவரது மகன், மன்தாத்தசின் ஜடேஜா மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இந்நிலையில், மன்தாத்தசின் ஜடேஜா பல நுாறு கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்துள்ளதாக, அவரது சகோதரி அம்பாலிகா தேவி, ராஜ்கோட் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து, அம்பாலிகா தேவியின் வழக்கறிஞர், கேதன் சிந்தவா கூறியதாவது:

தந்தையின் உயிலில், மன்தாத்தசின் ஜடேஜா சில திருத்தங்கள் செய்து, மதிப்பு மிக்க நிலங்களை தன் பெயருக்கு மாற்றி உள்ளார். இதை மறைத்து, சொத்துரிமை தொடர்பான விடுதலைப் பத்திரங்களிலும், அம்பாலிகா தேவியிடம் கையெழுத்து வாங்கி உள்ளார்.இது தெரியவந்ததை அடுத்து, துணை ஆட்சியரிடம் முறையிட்டோம். அவர், நில ஆவணம் தொடர்பான பெயர் மாற்றத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். இத்துடன், சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

கையெழுத்து
இந்த குற்றச்சாட்டை, மன்தாத்தசின் ஜடேஜா வின் வழக்கறிஞர் நிரவ் தோஷி மறுத்துள்ளார். அம்பாலிகா தேவி, தன் கணவர் மற்றும் மகன்கள் முன்னிலையில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று, விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறியுள்ளார். ராஜ்கோட் அரச குடும்பம், பல ஓட்டல்களை நடத்தி வருகிறது. மறைந்த மனோகர்சின் ஜடேஜா, ஐந்து முறை காங்., - எம்.பி., ஆகவும், குஜராத் நிதியமைச்சராகவும் பதவி வகித்துஉள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE