புதுடில்லி: 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்கு வதற்கான விதிமுறைகளை மார்ச்சில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மத்திய விமான போக்குவரதத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாற்றப்பட்ட விதிமுறைகளின்படி ட்ரோன் இயக்கு வதற்கான கட்டணங்கள் பெரும் அளவில் குறைக்கப்படுகின்றன.பெரிய ரக ட்ரோன்களை இயக்கும் பைலட்களுக்கான உரிமம், 3,000 ரூபாயாகவும், இதர ட்ரோன்களுக்கு 100 ரூபாய் என்றும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ட்ரோன்களை இயக்க 25 விதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் பெற வேண்டிய நிலையை மாற்றி, ஐந்து விண்ணப்பங்களாக குறைக்கப்பட்டு உள்ளன. தரையில் இருந்து 400 அடி வரையிலான பகுதி, 'கிரீன் ஸோன்' என அழைக்கப் படுகிறது. இந்த கிரீன் ஸோன்களுக்குள் ட்ரோன்களை பறக்கவிட அனுமதி தேவையில்லை.
விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 - 12 கி.மீ., துாரமுள்ள பகுதிகளில் 200 அடி வரை ட்ரோன்களை இயக்கவும் அனுமதி தேவையில்லை.மிகச் சிறிய ட்ரோன்களை வர்த்தக காரணங்களின்றி பயன்படுத்த பைலட் உரிமம் தேவையில்லை. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகை 1 லட்சமாக குறைக்கப்படுகிறது. இந்தியாவில் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ட்ரோன்கள் இயக்க தடைகள் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE