அத்தியாவசிய வசதிகள் இனி அதிகரிக்கலாம்...அதிகரித்தது காரமடை மக்களின் எதிர்பார்ப்பு:அடுத்த படியில்... அறிவித்த நொடியில்...!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய வசதிகள் இனி அதிகரிக்கலாம்...அதிகரித்தது காரமடை மக்களின் எதிர்பார்ப்பு:அடுத்த படியில்... அறிவித்த நொடியில்...!

Added : ஆக 27, 2021
Share
மேட்டுப்பாளையம்;காரமடை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் உயருமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.காரமடை பேரூராட்சி, 35 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பவானி
அத்தியாவசிய வசதிகள் இனி அதிகரிக்கலாம்...அதிகரித்தது காரமடை மக்களின் எதிர்பார்ப்பு:அடுத்த படியில்... அறிவித்த நொடியில்...!

மேட்டுப்பாளையம்;காரமடை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் உயருமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.காரமடை பேரூராட்சி, 35 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதை சுத்திகரித்து, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், ஒரு சில வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.பேரூராட்சியில் செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் என, இருவர் மட்டுமே உயரதிகாரிகளாக உள்ளனர். குப்பைகளை சுத்தம் செய்ய, துாய்மை பணியாளர்கள் குறைவாக உள்ளதால், பெரும்பாலான இடங்களில் குப்பை தேங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளது.பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயரும் போது, நகராட்சி கமிஷனர், மேலாளர், இன்ஜினியர், நகர்நல அலுவலர், நகரமைப்பு அலுவலர் என, ஐந்து தலைமை பணியிடங்களுக்கு, புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.இன்ஜினியரிங் துறையின் கீழ், உதவி பொறியாளர்கள், பட வரைவாளர், நகர் நல அலுவலர் துறையின் கீழ், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மேலும், நகரமைப்பு அலுவலர் துறையின் கீழ், நகரமைப்பு ஆய்வாளர், பில் கலெக்டர்கள், இளநிலை உதவியாளர்கள், கம்ப்யூட்டர் பணியாளர்கள், என, ஏராளமான பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் நியமிக்கப்படுவர். இதனால், பொது சுகாதாரம், சாலை, குடிநீர் வசதிகள் மேம்படுதல், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரிகள் உயர்வதோடு, இடங்களின் மதிப்பும் உயரும். இதனால், நகராட்சிக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கும்.பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதில், நகராட்சிக்கு கூடுதலாக எல்லைகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை. மேலும், தற்போதுள்ள 18 வார்டுகள் மட்டுமே, நகராட்சி எல்லையாக உள்ளதா என்ற விபரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.இருந்த போதும் நகராட்சியாக தரம் உயர்ந்ததால், மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், சாலைகள், சுகாதாரம் ஆகிய வசதிகள் உயரும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X