வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க உலக ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியில் பல தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. தகுதியுள்ள ஒவ்வொரு நபர்களும் தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பலரும் விரும்பி போய் தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து, சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தாத தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.