'ஆப்கன் தாக்குதலுக்கு பழி வாங்குவோம்'

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: ''ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்கள் செயலுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம்; பழி வாங்குவோம்,'' என,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், அந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக
 'ஆப்கன் தாக்குதலுக்கு  பழி வாங்குவோம்'

வாஷிங்டன்: ''ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்கள் செயலுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம்; பழி வாங்குவோம்,'' என,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், அந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.


தற்கொலைப்படை


இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் தங்கள் குடிமக்களை ஆப்கனில் இருந்து மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் விமான நிலையத்தின் 'அபய் கேட்' என்ற வாயில் மற்றும் அருகே உள்ள 'பாரோன்' என்ற ஓட்டல் ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் மாலை அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இரண்டு பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய சில பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


பழிக்குப்பழி

இந்த சம்பவம் குறித்து, வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது, ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நுாற்றுக்கணக்கான அப்பாவி ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்த தாக்குதலை மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும் தேடி வந்து வேட்டையாடுவோம். பழிக்கு பழி வாங்குவோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாத தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், சொத்துக்களை கண்டறிந்து அழிக்க, அமெரிக்க கமாண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும். அதிலிருந்து அவர்கள் மீளவே முடியாது. ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கும். இம்மாதம், 31க்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும்.


கொள்கை முரண்பாடு

தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாத அமைப்புக்கும் தலிபான்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இவர்கள் இருவருக்குமே கொள்கை முரண்பாடுகள் உள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாதிகள் இதற்கு மேல் ஆப்கனில் வேரூன்ற, தலிபான் அரசு அனுமதிக்காது என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின், தலிபான் அரசு அமையும் வரை காபூல் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, துருக்கி அரசு ஏற்கும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு துருக்கி அரசு தரப்பில் உறுதியான பதில் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


கண் கலங்கிய பைடன்!

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையாற்றினார். அப்போது அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து பேச முடியாமல் கண்களை மூடியபடி, சற்று நேரம் தலை குனிந்து மவுனமாக நின்றார்.

விமான நிலையத்தில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் குறித்து பேசுகையில், அதிபரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. ''பயங்கரவாதிகளை தேடி வந்து வேட்டையாடுவோம்,'' என கூறியபோது,அவர் குரலில் உறுதி வெளிப்பட்டது.


அரை கம்பத்தில்அமெரிக்க கொடி!

ஆப்கன் விமான நிலைய தாக்குதலில் உயிரிழந்த 13 அமெரிக்க வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அமெரிக்க பார்லிமென்ட்டான, 'கேப்பிடோல்' கட்டடத்தில் உள்ள அமெரிக்க தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட சபாநாயகர் நான்சி பெலோசி உத்தரவிட்டார்.


விமான நிலையத்தில்குறையாத மக்கள் கூட்டம்!

காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன் தினம் குண்டு வெடித்து மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையிலும், விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் நேற்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. குண்டு வெடிப்புக்கு பின் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்து இருப்பதால், குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர். விமான நிலையத்தில், பயங்கர ஆயுதங்களுடன் தலிபான்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


'அமெரிக்கர்களே எங்கள் இலக்கு'

விமான நிலைய தாக்குதல் குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ்.கே., பயங்கரவாதிகள் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர். அதில் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், முகத்தை கருப்பு முகமூடியால் மறைத்த பயங்கரவாதி இடுப்பில் வெடிகுண்டு, 'பெல்ட்' இணைக்கப் பட்டு, ஐ.எஸ்., கொடிக்கு முன் நிற்கும் படம் இடம் பெற்று இருந்தது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆப்கன் கூட்டாளிகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தலிபான்களின் சோதனை சாவடிகளை கடந்து, அமெரிக்க படையினருக்கு 5 மீ., தொலைவில் சென்றவுடன் இடுப்பில் இருந்த வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மூன்றாவது தாக்குதல் முறியடிப்பு!

காபூலில் நேற்று முன் தினம் இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து முடிந்த பின், பாகிஸ்தானின் ஹக்கானி பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பேரை, தலிபான்கள் கைது செய்தனர். அவர்கள் மத்திய ஆசிய நாடான, துர்க்மெனிஸ்தான் துாதரகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 'காபூல் வெடிகுண்டு தாக்குதலில் ஹக்கானி பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் பங்கு இருப்பது, தலிபான்களுக்கும் தெரியும்' என, அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.


ஐ.நா.,வில் இந்தியா கண்டனம்!

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதியும், பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதோடு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளுக்கு எதிராகவும், உலகமே ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ், காபூல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு கண்காணிப்பு

ஆப்கன் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறியதாவது:ஆப்கனில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்கிறோம். அங்குள்ள தற்போதைய சூழல் மாறக்கூடியது. அங்கிருந்து நாடு திரும்ப விரும்பிய இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளதுடன், பணிகள் தொடர்கின்றன. தற்போதுவரை, அங்கு யார் ஆட்சி அமைப்பது என்பதில் தெளிவான நிலை உருவாகவில்லை.இருப்பினும், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


பிணங்கள் மிதந்த ரத்த கால்வாய்

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறியதாவது: 'அபய் கேட்' பகுதியில் 10 மணி நேரமாக வரிசையில் காத்திருந்தேன். மாலையில் திடீரென கால்களுக்கு அடியில் உள்ள நிலத்தை உருவியதைப் போல அதிர்வு ஏற்பட்டது. பயங்கர சத்தத்தில் சில மணி நேரங்களுக்கு காது கேட்கவில்லை.எங்கு பார்த்தாலும் உடல்களும், உடல் உறுப்புகளும் சிதறிக்கிடந்தன.

பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ரத்த சகதியாக கிடந்தனர். உடல்களை அப்புறப்படுத்த கூட யாரும் இல்லை.வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு அருகே இருந்த கழிவு நீர் கால்வாயில், உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் அந்த கால்வாய் மேல் பரப்பில் ரத்தம் படர்ந்து, ரத்த கால்வாயாக காட்சி அளித்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
28-ஆக-202112:13:46 IST Report Abuse
Paraman இந்த பீஜிங்கு பைடேன் நல்லா நடிக்கிறான் இந்த குண்டு வெடிப்பில் இறந்த அனைவரின் ஆன்மாக்களின் சாபமும், குருதியும் இந்த சபிக்கபட்ட மனநோய் பீடித்த பீஜிங் பைடேன் கைகளிலே தான். இவனின் இந்திய வெறுப்பும், சீன கொத்தடிமை தனமும் தான் இவன் வேண்டுமென்றே பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள போர் ஆயுதங்களை, விமானம், ஹெலிகாப்டர், பீரங்கிகள், ஏவுகணைகள் என்று ஒரு பெரு ஆயுத குவியலை, சீன மொதலீலைகளின் உத்திரவு படி மூர்க்க தாலிபான்களுக்கு பரிசாக வேண்டுமென்றே விட்டு தந்து இருக்கிறான். இவனுடய கொடும் சதித்தனத்தை இந்திய அரசு புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. இவனுக்கு ஒட்டு போட்ட அணைத்து அமெரிக்கர்களும் தங்கள் மூஞ்சிகளில் தாங்களே காறி துப்பிக்கொண்டு இருக்கின்றனர். இவனும் அந்த கம்முனிஸ்ட் கமலாவும் அமெரிக்காவை அழிக்க வந்துள்ள விஷ கிருமிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X