மதுரை : மக்கள் அனைவரையும் நாத்திகர்களாக மாற்ற நினைத்த அரசு, மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற அரசின் திட்டம் குறித்து அவர் பேசியதாவது: கோயில் நடைமுறைகளை மாற்றுவதற்காகவே அரசு திட்டமிட்டுள்ளது. மூலவரை யார் தொட்டால் என்ன என்பது வீம்பா பக்தியா. மூலவரை தொடுவதற்கென்றே சிலர் உள்ளனர். மற்றவர்கள் தொட முடியாது. கடவுளை பாடிய ஆழ்வார்கள் கூட மூலவரை தொட்டதில்லை. ராமானுஜர் கூட தொட்டதில்லை. அரசர்கள், பீடாதிபதிகள் கூட மூலவர்களை தொட்டதில்லை.
அன்று மட்டும் அல்ல இன்றும் அதுவே நடைமுறை. வானமாமலை, அகோபிலம் ஜீயர்கள் மூலவர்களை தொட்டு அபிஷேகம் செய்கிறார்களா.. சங்கராச்சாரியார்கள் சிவன் சன்னதிக்குள் சென்று அபிஷேகம் செய்கிறார்களா... இல்லையே... இவை அனைத்துமே ஏற்கனவே நியமிக்கப்பட்ட சம்பிரதாயங்களின் படிதான் நடக்கிறது.

மக்களை நாத்திகர்களாக்கும் திட்டத்தில் இருக்கும் அரசு இவ்வாறு செய்து மக்களை பேதப்படுத்துகிறது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு அரசு தானாக கிடைக்கவில்லை. பெருமாள் தான் கொடுத்தார். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மக்களிடம் கேட்டுப்பாருங்கள். கடவுள் இல்லை என்பவர் எத்தனை பேர். தற்போதுள்ள வழக்கத்தை மாற்றக்கூடாது என்றுதான் பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
கோயிலுக்கு உள்ள சட்டத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றக்கூடாது. எங்களை மிரட்டுவது என்பது உங்களுக்கு கரும்பு தின்பது போல. இதை சமாளிக்கும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ராமானுஜர் காலம் தொட்டு எவ்வளோ பிரச்னைகளை சமாளித்துள்ளோம். சர்வேஸ்வரன் எதையும் திருத்துவான்... இதையும் திருத்துவான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE