செய்திகள் சில வரிகளில்... ரோடு அமைக்கும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... ரோடு அமைக்கும் பணி துவக்கம்

Added : ஆக 28, 2021
Share
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இம்மிடிபாளையம் கிராமம். பொள்ளாச்சியில் இருந்து தேவராடிபாளையத்துக்கு, இக்கிராமம் வழியாக, டவுன் பஸ் வந்து செல்கிறது.இம்மிடிபாளையம் வரையிலான ரோடு, நடந்து செல்ல இயலாத அளவுக்கு குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதையடுத்து, ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தார் சாலையை புதுப்பிக்க, 50 லட்சம் ரூபாய் நிதி

கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இம்மிடிபாளையம் கிராமம். பொள்ளாச்சியில் இருந்து தேவராடிபாளையத்துக்கு, இக்கிராமம் வழியாக, டவுன் பஸ் வந்து செல்கிறது.இம்மிடிபாளையம் வரையிலான ரோடு, நடந்து செல்ல இயலாத அளவுக்கு குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதையடுத்து, ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தார் சாலையை புதுப்பிக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கிணத்துக்கடவு, லட்சுமிநகர் - கருணாகரபுரி வரையிலான, 2.4 கி.மீ., தொலைவுக்கு ரோடு பணி துவங்கியது. தார் கிடைக்காததால், கடந்த, ஐந்து மாதங்களாக பணிகள் தொடரவில்லை. மக்கள் சிரமம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

நல்லாறு அணை கட்ட வலியுறுத்தல்

உடுமலையில், மா.கம்யூ., கொடுங்கியம் கிளை மாநாடு நடந்தது. ஈஸ்வரன் தலைமை வகித்தார். ரத்தினசாமி கொடியேற்றினார். லட்சுமி காந்தன், மயிலம்மாள் முன்னிலை வகித்தனர். உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் பழனிச்சாமி, ராஜகோபால், கிளைச்செயலாளர், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தை பாதுகாக்கும் வகையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட வேண்டும். உத்தரவு வழங்கிய அனைவருக்கும் தொகை வழங்கவும், வேலை உறுதித்திட்டம் முறைகேடுகள் இல்லாமல் நடக்கவும், முழுமையான ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழுதாகும் மின்சாதனங்கள்

பொள்ளாச்சி, தாளக்கரை முத்துார் துணை மின்நிலையம் வாயிலாக, பல்வேறு கிராமங்கள் மின் வினியோகம் பெறுகின்றன. அவற்றில், தேவம்பாடி வலசு, காளிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், மின்னழுத்த ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது.சீரற்ற மின்னழுத்தத்தில், மின் விளக்குகள் எரிவதாகவும், மின் சாதனங்கள் பழுதாவதாகவும் புகார் எழுகிறது. சம்பந்தப்பட்ட பகுதி மின்வாரிய அதிகாரிகள், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார நிலையத்துக்கு உதவி

ஆனைமலை அடுத்துள்ள, வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருவோருக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக, திவான்சாபுதுார் கமல காமாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தினர், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வழங்கியுள்ளனர்.

தேர்வு மையம் எதிர்பார்ப்பு

வால்பாறையில், தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை மலைப்பகுதியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வு மாணவர்கள், தேர்வு எழுத, பொள்ளாச்சி மற்றும் உடுமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடும், எஸ்டேட் பகுதியிலிருந்து, அதிகாலை நேரத்தில் தேர்வு எழுத அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பஸ்களில் நீண்ட துாரம் பயணம் செய்து, பொள்ளாச்சி, உடுமலை தேர்வு மையத்துக்கு சென்று வருவதால், மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, தேர்வு எழுத முடியாமல் தவிக்கிறோம்.எனவே, வால்பாறை மலைப்பகுதி மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வால்பாறையில் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

விதிமீறும் கவச வாகனங்கள்

பொள்ளாச்சியில், செயல்படும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும், அவற்றின் ஏ.டி.எம்., மையங்களுக்கும் பணம் நிரப்ப, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்நிறுவனங்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன், கவச வாகனங்களின் வாயிலாக பணம் கொண்டு வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி வங்கிக் கிளைகளுக்கு வரும் இந்த வாகனங்கள், சாலை விதிகளை மதிப்பதில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்ற வாகனங்கள் போல, ரோட்டை மறித்து மணிக்கணக்கில் நிறுத்தப் படுகின்றன. இதனால், பல நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
வங்கிக்கு வரும் வாகனம் என்பதால், போலீசாரும் கண்டு கொள்வதில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அந்தந்த வங்கிக் கிளை நிர்வாகம், போக்குவரத்துக்கு இடையூறின்றி கவச வாகனங்கள் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது.

சர்வீஸ் ரோட்டில் சொதப்பல்
பொள்ளாச்சி - உடுமலை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட போது, இரு பக்கமும் தடுப்புகள் அமைத்து, உள்ளூர் போக்குவரத்துக்காக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.இதில், சின்னாம்பாளையத்தில் இருந்து சர்வீஸ் ரோடு, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டிப் போடப்பட்டது. அதன் பின், ஒரு ஆண்டுக்கும் மேலாக அப்படியே விட்டுச் சென்றனர். இதனால், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், ரோடு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், அதையும் முழுமையாக செய்யாமல், பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகள் மேடு, பள்ளமாக விட்டுள்ளனர்.

ரோட்டின் கடைசி அடுக்கும் தார் போட்டு நிறைவு செய்யப்படாமல் உள்ளனர். இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'ஆன்லைன்' கருத்தரங்கம்உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் 'தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஓர் ஆய்வு-2021' என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரிச் செயலர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை நேரு கல்லுாரி பேராசிரியர் வெங்கடாச்சலம், பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.அதேநேரம், மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் பிரபாகர், துறைத்தலைவர் உமாமகேஸ்வரி மற்றும், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

காணும் இடமெல்லாம் குப்பை

ஆனைமலை ஒன்றியத்தில், தென்சங்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட ஊராட்சிகளில், காணுமிடமெல்லாம் ரோட்டோரங்களில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளதால், மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் நிலவுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.குப்பையை உடனடியாக சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறையாக குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து, உரம் தயாரிக்க வேண்டும்.

'டிரான்ஸ்பார்மர்' அகற்றணும்!

ஆனைமலை, அம்பராம்பாளையம் எம்.கே.கார்டன் பகுதியில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதியில், உயர்நிலைத்தொட்டி மற்றும் சமுதாய நலக் கூடத்துக்கு அருகில், மின்வாரியத்தினர் 'டிரான்ஸ்பார்மர்' அமைத்துள்ளனர்.மக்கள் எதிர்ப்பையும் மீறி 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, சப் - கலெக்டர், மின்வாரிய அலுவலங்களில் மனு கொடுத்துள்ளனர்.

மக்கள் நாடாளுமன்ற பிரசாரம்

உடுமலையில், கணக்கம்பாளையம் ஊராட்சி வெஞ்சமடையில் இ.கம்யூ., கட்சி சார்பில், மக்கள் நாடாளுமன்ற பிரசாரம் நடந்தது. இதை, முன்னாள் ஊராட்சித்தலைவர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். சுகுமார் தலைமை வகித்தார்.இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, நிர்வாகிகள் சவுந்தரராஜ், ரணதேவ், செல்வராஜ், காளிமுத்து, தி.மு.க., நிர்வாகிகள் லோகநாதன், நாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கரன், ம.தி.மு.க., வைரவேல், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'பார்க்கிங்' வசதியில்லாததால் அவதி

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், குறுகலான ரோட்டில் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், வால்பாறைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் 'கார் பார்க்கிங்' செய்ய வசதி இல்லாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் ரோட்டில் நிறுத்துவதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது.எனவே, வால்பாறை நகராட்சி சார்பில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X