சென்னை:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க., பேசிய நிலையில், அ.தி.மு.க., மற்றும்பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நேற்று, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் அரசினர் தனி தீர்மானத்தை, முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:மத்திய பா.ஜ., அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றப் போகிறோம். இத்தகைய நெருக்கடியான சூழலை, மத்திய அரசு தான் உருவாக்கி உள்ளது.
'வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளைக் காப்பாற்றவும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் மூன்று வேளாண் சட்டங்களும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை; வேளாண்மையை அழிப்பதாக இருக்கிறது' என, விவசாயிகள் சொல்கின்றனர். இத்தகைய சூழலில், மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் ஒரு துறைக்கு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. அதனால் தான், அந்தச் சட்டங்களை நிராகரிக்க வேண்டியதாக இருக்கிறது. மூன்று சட்டங்களுமே வேளாண்மைக்கு எதிரானதாகவும், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு பாதகமானதாகவும் அமைந்திருக்கின்றன.
எனவே, விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வேளாண்மை சென்று விடாமல் தடுக்கவும், மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.கடந்த 2020 ஆகஸ்ட் 9ல் துவங்கி, இன்று வரை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். அவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் இந்த அரசு, இந்த தீர்மானத்தை முன்மொழிகிறது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
பின்னர் நடந்த விவாதம்:
தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:
மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பையும், 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு உதவி செய்பவையாகவும் உள்ளன. விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் சட்டம். எனவே, தீர்மானத்தை வரவேற்கிறேன்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்:
டில்லியில் போராடும் விவசாயிகள், தமிழக சட்டசபை தீர்மானத்தைத் தான் எதிர்பார்த்தனர். மக்கள் மன்றத்தில் விவசாயிகளுக்காக போராடிய நமக்கு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை சரியாக முதல்வர் பயன்படுத்தி உள்ளார். மாநில சுயாட்சி மீது அக்கறை இல்லாதவர்கள், மாநில உரிமைகள் மீது அக்கறை இல்லாதவர்கள் இந்த சட்டத்தை ஆதரிப்பர். இதை எதிர்க்கும் சக்தி தமிழகத்திற்கு உள்ளதை நிரூபித்துள்ளோம்.
மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா:
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, திரும்பப் பெறக் கோரும் தீர்மானத்தை வரவேற்கிறேன்.
ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார்:
வேளாண் மக்களின் நலன் காக்கும் தி.மு.க., அரசும், முதல்வரும், விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்.
இந்திய கம்யூ., கட்சி - ராமச்சந்திரன்:
மூன்று வேளாண் சட்டங்கள், ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பவையாக உள்ளன. இதை எதிர்த்து போராடும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் இந்த தீர்மானம் உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி:
டில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து, தீர்மானம் கொண்டு வந்துள்ள முதல்வரை பாராட்ட வார்த்தையின்றி தவிக்கிறேன். முதல்வருக்கு வாழ்த்துகள்.
வி.சி., கட்சி - சிந்தனைச்செல்வன்:
விவசாயிகள் உரிமையை பறிப்பதோடு, காந்தியடிகள் முன்னெடுத்த அஹிம்சை போராட்ட கருத்தியலுக்கு எதிராக போர் தொடுப்பதாக, இந்த வேளாண் சட்டங்கள் அமைந்து உள்ளன. மத்திய அரசு, தீர்மானத்தை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் 'வாபஸ்' பெற வேண்டும்.
பா.ம.க., - ஜி.கே.மணி:
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த சட்டங்களால் மரபணு மாற்று விதை புகுந்து விடுமோ, உற்பத்தியாகும் பொருளுக்கு சரியான விலை கிடைக்காதோ என அச்சப்படுகின்றனர். விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் அமைய வேண்டும். இந்த சட்டம், எல்லா மாநிலத்திற்கும் பொருந்தாது. மத்திய அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை:
கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றும் தீர்மானம். மத்திய அரசு பிடிவாதமாக சட்டத்தை ரத்து செய்யாமல் உள்ளது. விவசாயிகள் ஓராண்டாக போராடி வருகின்றனர். 'இந்த சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்' என்றனர். ஆனால், தற்கொலை தான் இரட்டிப்பாகி உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.இத்தீர்மானத்தை எதிர்த்து, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். அதன்பின், முதல்வர் கொண்டு வந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு'
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழகத்தில் போராட்டம் நடத்திய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மூன்று வேளாண் சட்டங்களை, ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசுகையில், ''சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, திரும்ப பெற வேண்டும்,'' என்றார். இதே கோரிக்கையை, மனித நேய மக்கள் கட்சிஎம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவும் முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், ''தமிழகம் முழுதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும்,'' என்றார்.
அ.தி.மு.க., - பா.ஜ., வெளிநடப்பு
தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி, முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, பா.ஜ., வெளிநடப்பு செய்கிறது.
அ.தி.மு.க., - அன்பழகன்:
மூன்று சட்டங்களில் ஒன்று, 2019ல் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எனவே, அவசர கோலமாக அரசினர் தனி தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம். தமிழக விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து பேசி, சட்டத்தில் உள்ள லாப, நஷ்டங்களை அறிந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி, அதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்:
தீர்மானத்தை முன்மொழிந்த போது, சட்டங்களின் பாதகங்களை மட்டும் முதல்வர் கூறினார். இதற்கு முறையான பதில், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டதா?பாதகங்களை, விவசாயிகள் கோரிக்கைகளை, மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பார்த்து, நமக்கு சாதகமான பதில் இருந்தால், திருத்தம் கொண்டு வருவோம்; இல்லையெனில், நாம் அனைவரும் ஒன்று கூடி, முடிவு செய்வோம்.
விவசாயிகள் நலன் கருதி, அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால், இந்த மூன்று சட்டங்களின் சாதக, பாதகங்களை, பிரதமரை சந்தித்து விளக்கம் கேட்க லாம்.வேளாண் விஞ்ஞானிகளை அழைத்து, இதில் உள்ள நுட்பங்களை, பாதிப்புகளை கேட்கலாம்; தெளிவாக தெரிந்த பின், தீர்மானத்திற்கு வருவோம்.
அமைச்சர் துரைமுருகன்:
நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது; நாங்கள் எதிர்த்தோம். முதல்வர் படித்த தீர்மானம், குழந்தைகளுக்கு கூட புரியும். எனவே, தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்பதை மட்டும் தெரிவியுங்கள்.
பன்னீர்செல்வம்:
இந்த சட்டங்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தடை உள்ளது. இந்த சூழ்நிலையில் தனி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பலாமா என, சட்ட நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டி உள்ளது.
அமைச்சர் துரைமுருகன்:
விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சட்டத்தை வாபஸ் பெற வேண்டுகோள் விடுக்கிறோம். இதை ஆதரிக்கிறீர்களா; இல்லையா? இருக்கலாம் என்றால் இருங்கள்; இல்லையென்றால் போங்கள்.
பன்னீர்செல்வம்:
'இருப்பதென்றால் இருங்கள்; இல்லையென்றால் போங்கள்' என்று அமைச்சர் கூறுகிறார். எங்களை வழியனுப்பும் பாங்கில் பேசுகிறார்.
சபாநாயகர்:
அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை; ஜாலியாக கூறினார்.
முதல்வர் ஸ்டாலின்:
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தீர்மானத்தில் கூறி உள்ளோம். நீங்களும் ஏற்றுக் கொள்வீர் என்ற நம்பிக்கையில், தீர்மானம் கொண்டு வந்தோம்.ஆனால், பா.ஜ., வெளிநடப்பு செய்து விட்டது. நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்பதை மட்டும் தெரிவிக்கவும்.
பன்னீர்செல்வம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, இந்த பொருள் குறித்து, மத்திய - மாநில அரசுகள், எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே, தீர்ப்பு வந்த பின் முடிவெடுக்கலாம். இந்த பிரச்னை குறித்து நல்ல முடிவெடுக்க, சட்டசபை தெரிவு குழுவுக்கு அனுப்பலாம்.
முதல்வர்:
ஆட்சியில் இருந்தபோது, இதை எதிர்த்து, திரும்ப பெறக் கோரி, ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை? நீங்கள் செய்ய முடியாததை, நாங்கள் செய்கிறோம்.
பன்னீர்செல்வம்:
சாதக, பாதகங்களை, முதல்வர் டில்லி சென்று, பிரதமரோடு பேச வேண்டும்.
முதல்வர்:
டில்லி சென்றபோது, பிரதமரிடம் தெளிவாகக் கூறி உள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடையாது. எனவே தான், இந்த தீர்மானம். இதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.
பன்னீர்செல்வம்:
அ.தி.மு.க., கூறியபடி, சாதக, பாதகங்களை கலந்து பேசி முடிவெடுக்காமல், தீர்மானத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பதால், வெளிநடப்புசெய்கிறோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.
'நதியில் வெள்ளம்; கரையில் நெருப்பு' பன்னீர்செல்வம் பேச்சால் சிரிப்பலை
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது. அப்போது, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் குறித்து, சபை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் ஒரு கருத்து கூறினார்.
மீண்டும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை உள்ளே வந்ததும், அமைச்சர் துரைமுருகன் எழுந்து, ''எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக நான் பேசியது, அவரது மனதை புண்படுத்துமானால், அதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கவும்,'' என்றார்.அதை ஏற்று, அவர் பேசியதை நீக்குவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து, பன்னீர்செல்வம் பேசுகையில், ''சபை முன்னவர் மீது, எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவராக அவர் கூறியதை நீக்கும்படி கூறியதற்கு நன்றி. என் நிலைமை, அவருக்கு நன்றாக தெரியும். ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. நதியில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு; இடையில் இறைவனுடைய சிரிப்பு; இது தான் என் நிலை,'' என்றார். இதனால், சபையில் சிரிப்பலை எழுந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வாய் விட்டு சிரிக்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காத்தனர்.