சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பதாக்ஷான் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் தலிபான்கள் புகுந்தனர்.

'நாங்கள் இஸ்லாம் மதத்தின் பாதுகாவலர்கள்... எங்களில் ஒருவருக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்கிறோம்...' என்றபடி, பெற்றோரின் அனுமதி இன்றி வீட்டிலிருந்த 21 வயது பெண்ணை இழுத்து சென்றுள்ளனர் தலிபான்கள்.அந்த பெண்ணை திருமணம் செய்தவர் மட்டுமல்லாமல், மேலும் நான்கு பேர் தினமும் இரவு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.இப்படி நுாற்றுக்கணக்கான பெண்கள் தினமும் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றனர்.
சிறுமி முதல் கணவரை இழந்த பெண்கள் வரை, தலிபான்களின் வன்புணர்வுக்கு ஆளாகி வருகின்றனர்.வெடிகுண்டு தாக்குதல்ஆண் துணை இல்லாமல் வெளியே வந்த ஒரு பெண்ணை, துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்து படுகொலை செய்தனர், தலிபான்கள். 'நெயில் பாலீஷ்' போட்டிருந்த பெண்ணின் விரல்கள் துண்டிக்கப்பட்டன.எப்படியாவது உயிர்பிழைக்க வேண்டும் என தப்பியோட முயற்சித்த ஆப்கன் மக்கள், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுகின்றனர்.
இப்படி தான்... மத அடிப்படைவாதிகளின் கையில் சிக்கும் நாட்டின் நிலை மிக குரூரமாக இருக்கும்.மத பயங்கரவாதம் நுழைந்த பின், ஆப்கனில் நடக்கும் கொடூர நிகழ்வுகளில் இருந்து, பாடம் கற்று கொள்ள வேண்டும்.முஸ்லிம் மத அடிப்படைவாதிகளான தலிபான்கள், அப்படி என்ன ஆப்கனில் செய்து விட்டனர் என கேள்வி எழுகிறதா...
* தலிபான்களை பொறுத்தவரையில் பெண் என்பவள் ஆண்களின் போதை பொருள்; அவ்வளவு தான். அவர்களுக்கு கல்வி எதற்கு? பெண் கல்வி என்பது, ஆப்கனில் முற்றிலும் மறுக்கப்பட்டது
* நம் தேசத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ஆப்கனில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது
*'புர்கா' அணியாமல் அவர்கள் வெளியே வரக் கூடாது. வீட்டிலிருந்து வெளியே வந்தால், துணைக்கு குடும்பத்திலிருந்து ஒரு ஆண் கண்டிப்பாக வர வேண்டும்
*'மேக்கப்' போடுவது, 'ஹைஹீல்ஸ்' அணிவது என எல்லாமே குற்றம்
*பொது இடங்களில் பெண்கள் சத்தமாக பேச அனுமதி இல்லை. ஏனெனில் அந்த குரலை கேட்டு, ஆண்களுக்கு ஆசை வந்து விட்டால் என்ன வாவது?
*வீட்டுக்குள் பெண்கள் இருப்பது, ஜன்னல் வழியாக கூட வெளியே தெரிய கூடாது. அதற்கு, தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் குடியிருப்போர் கதவு, ஜன்னல்களை திரைச்சீலையால் மூட வேண்டும்
*பெண்களை புகைப்படம் எடுக்க கூடாது எனும் போது, திரைப்படம் என்பதெல்லாம் தலிபான்களால் ஏற்று கொள்ளவே முடியாத செயல்
*நாளிதழ், புத்தகம், கடை விளம்பரம் என எதிலும் பெண்ணின் புகைப்படம் இடம் பெறவே கூடாது
*இருசக்கர வானங்களில் பயணிக்க கூட பெண்களுக்கு அனுமதி கிடையாது. கணவனுடன் டாக்சியில் பயணம் செய்யலாம் என, பெண்களுக்கு 'மிகப்பெரிய' உரிமையை வழங்கியிருக்கின்றனர், தலிபான்கள்
*பெண்ணிற்கு உயிர் போகும் ஆபத்து என்றாலும், ஆண் மருத்துவர் சிகிச்சை அளிக்க கூடாது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், உயிரிழந்த பெண்கள் ஏராளம். சரி... பெண் மருத்துவர் சிகிச்சை செய்யலாமே என்றால், படிப்பதற்கு தான் பெண்களுக்கு அனுமதி இல்லையே!
*பெண் குழந்தைகளுக்கு 8 வயது ஆகிவிட்டால், உடனே புர்கா அணிவித்து விட வேண்டும். பெண் குழந்தையை பார்த்தாலும், மத அடிப்படைவாதிகளால் சும்மா இருக்க முடியாது
* கால்பந்து முதல் பட்டம் விடுவது வரை எல்லாவற்கும் தடை. யாராவது விளையாடினால், அவரின் உடலில் தோட்டா புகுந்து விடும்
* 'டிவி' பார்க்க கூடாது. பெண்கள் வேறு என்ன தான் செய்ய வேண்டும்? என கேள்வி கேட்க விரும்புகின்றீரா... ஆம்... தலிபான்களின் ஆசைக்கு அடிபணிய வேண்டும். அது மட்டும் தான்
* கட்டாயத் திருமணம், பாலியல் சித்ரவதை, பெண்களை வாராந்திர சந்தையில் விற்பனை போன்ற காட்டுமிரண்டித்தனமாக ஆட்சியை, தலிபான்கள் இதற்கு முன் நடத்தினர். இனியும் நடத்துவர் என்பதில் சந்தேகமில்லை
இத்தகையை கொடூரத்தை, குரூரத்தை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா?உலகின் வேறெந்த நாடுகளை விடவும், பெரும்பான்மை மக்களை விட, சிறுபான்மை மதத்தினருக்கு அதிக உரிமைகளும், சலுகைகளும், பாதுகாப்பும் வழங்கப்படுவது நம் இந்தியாவில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.இங்கு, 80 சதவீதத்திற்கு மேல் ஹிந்துக்கள் வசித்தாலும், சிறுபான்மை மதத்தினர் எவ்வித அல்லலும் அனுபவிக்காமல், முழு சுதந்திரத்துடன் வசிக்க முடிகிறது.
உதவித் தொகை
இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த முத்தலாக் விவாகரத்து முறையும், இங்கே சட்ட ரீதியில் ஒழிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் தான், இஸ்லாமியர் ஹஜ் பயணம் செய்யவும், கிறிஸ்த்துவர் ஜெருசலேம் செல்லவும் ஆண்டுதோறும் அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
சிறுபான்மை மதத்தினர் வெளிநாடுகளில் உள்ள புனிதத் தலங்களுக்கு செல்ல பண உதவி செய்யும் நம் அரசு, இங்கு பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்கள், உள் நாட்டிலேயே உள்ள காசி, ராமேஸ்வரம் செல்வதற்கு கூட எவ்வித உதவித் தொகையும் வழங்குவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.இங்கு, எந்த மதத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விரும்பிய கல்வியை பயிலலாம்; விரும்பும் பணி செய்யலாம்.உணவு, உடை, உறைவிடம், அலங்காரம், மொழி, கலாசாரம், பண்பாடு என அனைத்து விதத்திலும், தனி மனித சுதந்திரம் எங்கும் தடுக்கப்படுவதில்லை.இப்படி ஒரு தேசத்தை வேறெங்கும் காண முடியாது.
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், நாட்டின் உச்சபட்ச பதவியில் இருக்கும் ஒருவரைக் கூட, தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கூட்டத்தையும் நம் தேசத்தில் தான் பார்க்க முடியும்.ஆதாரமே இல்லாமல் அப்படி குற்றச்சாட்டை முன் வைக்கும் நபர் மீது கூட கடும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை; அப்படி எடுக்க நம் சட்டத்தில் இடமும் இல்லை.எதையும் முறையாக, நிதானமாக சட்டப்படி விசாரித்து, அதன் பின் தீர்ப்பு வழங்கி தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த விசாரணையிலும் மனித உரிமை மீறல் இருக்கக் கூடாது எனச் சொல்வது தான், நம் அரசியல் சாசன சட்டத்தின் சிறப்பம்சம்.
ஆண்டி முதல் அரசியல் தலைவர் வரை அனைவரையும் எதிர்த்து கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. இந்தியாவை தவிர, வேறெந்த தேசத்தில் இத்தனை சுதந்திரம் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.அண்டை நாடுகளான சீனாவிலோ, அரசு சொல்வது தான் செய்தி. அரசை மீறி வேறெந்த வகையிலும் செய்தி வெளியாகாது.
பாகிஸ்தானை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அங்குள்ள நிலைமை உலகறிந்த ரகசியம். பெயரளவில் அதிபரும், பிரதமரும் இருப்பார்களே தவிர, எப்போதுமே அந்நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.சிறிய நாடான சிங்கப்பூரில், பத்திரிகையாளர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவரே முழு பொறுப்பாளர். எனவே தான், காழ்ப்புணர்ச்சியோடு வதந்திகள் பரவுவதில்லை.
நம் நாட்டில், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு அளவே இல்லை.உணவு, உடை, கலாசாரம், மதம், மொழி, இனம் என அனைத்து வகையிலும் சிறுபான்மையினரின் சொர்க்க பூமியாய் இருப்பது, உலகிலேயே நம் நாடு மட்டும் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அப்படியிருக்கையில் இங்கு இருக்கும் சிலர், தலிபான்களின் செயல்களை ஆதரிக்கின்றனர் என்பது உண்மை.
சில ஆண்டுகளுக்கு முன், இயக்குனர் அமீர், 'ஆப்கனில் உள்ள தாலிபன்கள் போராளிகள். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், கொள்கைக்காகவும் போராடுகின்றனர்' என பேசி உள்ளார். தலிபான் ஆப்கன் மண்ணில் தங்கள் கொள்கை என்ற பெயரில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை மேலே பார்த்தோம்... அமீர் அதை தான் ஆதரிக்கிறாரோ?நம் நாட்டில் உள்ள திராவிட அரசியல்வாதிகள், தலிபான்களுக்கு எதிராக பேசவே மாட்டார்கள். அவர்கள் மறைமுகமாக தலிபான்களையும், மத அடிப்படைவாதத்தையும் ஆதரிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நம் நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சிலர், சமூகவலைதளங்களில் நுாதனமாக தலிபான்களை ஆதரிக்கும் செய்தியை பதிவிடுகின்றனர்.'பொள்ளாச்சியில் நடக்கவில்லையா, உ.பி.,யில் நடக்கவில்லையா...' என குதர்கமாக விமர்சிக்கின்றனர்.ஒரு நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும், இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் குற்றத்தையும் ஒப்பிடுவதன் நோக்கம், தலிபான்களை ஆதரிப்பதே!
சுதந்திரம் என்ற பேச்சுக்கே அர்த்தம் இல்லாத தலிபான்களை ஆதரிப்போர், இனியும் ஏன் இந்த 'நரகத்தில்' இருந்து அல்லல் பட வேண்டும். அவர்களின் சொர்க்க பூமியான தலிபான்களின் நிழலில் தஞ்சம் அடைய ஆப்கனுக்கே செல்லலாமே... என, இந்திய குடிமகன் யாரும் கூறமாட்டார்கள்.இந்நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்று, கொடுத்தவர் கண்ணை தோண்டி எடுக்க முயலும் நயவஞ்ச கூட்டத்தையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் நம் பாரத தாய்.என்ன செய்ய... அவள் தான் தாய் என்றாகி விட்டதே. தன் பிள்ளையிடம் பேதம் பாராது நடந்து கொள்கிறாள்.
விஷ விதை
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது, யாரெல்லாம் இஸ்லாமிய தேசத்தில் வசிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. உண்மையில், இந்திய மண்ணை நேசித்த இஸ்லாமியர் பலர் நம் நாட்டின் பெருமை உணர்ந்து இங்கேயே தங்கினர். அதுபோல, தற்போது தலிபான்களை ஆதரிப்போர் தாராளமாக அங்கே செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியானால், எத்தனை பேர் அதற்கு தயாராக இருப்பர்?
பேச்சு வேறு, நிதர்சனம் வேறு என்பதை மக்கள் உணர வேண்டும். மதத்தின் பெயரால் மனித மனங்களில் விஷ விதை பரப்பும் கயவர்களின் மாய வலையில் இளைஞர்கள் விழாமல் தடுப்பது அவர்களின் பெற்றோர், பெரியோரின் ஆகப் பெரிய கடமையாக உள்ளது. இந்த தேசத்திற்கு எதிராக, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் கூட்டம், இந்நாட்டில் இருக்கிறது. அதை வேரோடு களையெடுக்க வேண்டும்.
அ.சரண்யா
சமூக ஆர்வலர்
saranyamavy@gmail.com