சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கல்விக்கடனை கட்டாயம் கட்டணும்!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 28, 2021
Share
Advertisement
வங்கிகளின் வாராக்கடனாக கல்விக்கடன் மாறுவது ஏன்; அதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து கூறுகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் ஏ.ஜி.தனசேகரன்:வங்கிகளால் வழங்கப்படும் கல்விக்கடன், திருப்பி செலுத்தப்படாத வாராக்கடனாக மாற முக்கிய காரணம், கடன் வாங்கும் மாணவர், அதை திருப்பிச் செலுத்த ஆர்வம் காட்டாமல் இருப்பதே.மேலும், ஒவ்வொரு தேர்தலின் போதும்,
சொல்கிறார்கள்

வங்கிகளின் வாராக்கடனாக கல்விக்கடன் மாறுவது ஏன்; அதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து கூறுகிறார், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் ஏ.ஜி.தனசேகரன்:

வங்கிகளால் வழங்கப்படும் கல்விக்கடன், திருப்பி செலுத்தப்படாத வாராக்கடனாக மாற முக்கிய காரணம், கடன் வாங்கும் மாணவர், அதை திருப்பிச் செலுத்த ஆர்வம் காட்டாமல் இருப்பதே.

மேலும், ஒவ்வொரு தேர்தலின் போதும், ஏதாவது சில முக்கிய கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம்' என்கின்றன. அவ்வாறு செய்ய முடியுமா, முடியாதா என்பது ஒருபுறம் இருக்க, நியாயமாக கடனை திருப்பிச் செலுத்த நினைக்கும் மாணவரும், அவ்வாறு செய்யாமல் இருந்து விடுகிறார்.

எனவே, அரசியல் கட்சிகள், 'வங்கிகளில் வாங்கி இருக்கும் கல்விக்கடனை மாணவர்கள் முறையாக திருப்பி செலுத்த வேண்டும்' என்று தான் வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும், கடன் என வாங்கினால், அதை எக்காரணம் கொண்டும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உணர்வு, மாணவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

எந்த கடனையும், மூன்று தவணைக்கு மேல் திருப்பிச் செலுத்தாமல் இருந்து விட்டால், அது தானாகவே வாராக்கடன் ஆகிவிடும். வீட்டுக்கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை திருப்பிச் செலுத்த அவகாசம் உண்டு. ஆனால், கல்விக்கடனுக்கு மட்டும் அவகாசம் கிடையாது. வேலைக்கு போனது முதல், திருப்பிச் செலுத்த வேண்டும் என இருப்பதால், பலரும் அசட்டையாக இருந்து விடுகின்றனர்.

கல்லுாரி படிப்பை முடித்ததில் இருந்து, ஓராண்டு வரை அவகாசம் வழங்கப்படுகிறது. வேலை கிடைக்க தாமதம் ஏற்படும் போது, கடனை திருப்பிச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. கடனை வாங்கியதில் இருந்து, ஏழாண்டுக்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை. அதற்குப் பிறகும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை கூட எடுக்க முடியும்.

கல்விக்கடன்கள் வாராக்கடனாக ஆகாமல் இருக்க வேண்டும் எனில், வேலை வழங்கும் நிறுவனங்கள் முக்கியமான ஒரு செயலை செய்ய வேண்டும். வேலைக்கு சேரும் மாணவர்களின் பிற சான்றிதழ்களை சரிபார்ப்பது போல, அவர் கல்விக்கடன் பெற்றுள்ளாரா, அதை முறையாக திருப்பி செலுத்தி உள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மேலும், அந்த மாணவர் சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து, இ.சி.எஸ்., முறையில் பணத்தை திருப்பி கொடுக்க, வேலை கொடுக்கும் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதுபோன்ற உத்தரவு, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு, அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டால், வாராக்கடன் அளவு வெகுவாக குறையும்!



மொழிக்கு உயிர் உச்சரிப்பே!


'மொழிக்குரிய தனித்துவத்தை கடைப்பிடிக்காவிட்டால், அந்த மொழிக்குரிய தனித்துவத்துடன் பேசாவிட்டால், நாம் பேசும் மொழிக்கு நாமே துரோகம் செய்வது போலாகி விடும்' என்கிறார், இலங்கை வானொலியின் முதன்மை ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகபூஷணி கருப்பையா:

நம் சிந்தனைகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி மொழி. வானொலியில் அந்த மொழியை வைத்து, ஆயிரக்கணக்கான நேயர்களுடன் நாம் இணையும் போது, மொழியை மிகக் கவனமாக கையாள வேண்டும். அதற்காக பிழையற பேச வேண்டும்; சுவைபட மொழிதலும் அவசியம்.மேலும், செம்மொழியான நம் தமிழ் மொழிக்கு உயிர், உச்சரிப்பு தான். உச்சரிப்பை சரியாக நாம் சொல்லவில்லை என்பது, அது மொழிக்கு செய்யும் தீங்கே. எந்த அறிவிப்பாளராக இருந்தாலும், அவரின் திறமையும், தனித்துவமும், அவரது சிறந்த மொழி பிரயோகத்தின் மூலமே வெளிப்படும்.

எனவே சொற்பிழை, பொருட்பிழை தவிர்த்து, உரிய உச்சரிப்போடு அறிவிப்பு பணியை செய்ய வேண்டும். அறிவிப்பாளர் ஒரு கலைஞராக மட்டுமின்றி, நல்ல ரசிகராகவும் இருக்கும் போது, நேயர்களின் ரசனைக்குரியவராக ஆகி விடுகிறார்.அதனால் வானொலி என் தாய் வீடாக என்னை வளர்த்தது; தொலைக்காட்சி ஒரு பள்ளிக்கூடமாக நிறைய கற்றுத் தந்தது.

மொழிக்குரிய தனித்துவத்தை கடைபிடிக்காவிட்டால், அது மொழிக்கும், அது சார்ந்த துறைக்கும் நாம் செய்யும் துரோகம். அறியாமல், தெரியாமல் உச்சரிப்பு பிழைகள், மொழி பிழைகள் செய்பவர்கள், உரிய பயிற்சி பெற்று தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.ஆனால், இன்றைய சில இளம் தொகுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், பிற மொழி கலப்புடன் பேசி, எப்படியோ சமாளித்து விடுகின்றனர்.

குரல் வளம் மட்டும் இருந்தால் போதாது. மாறாக, நல்ல மொழி வளம் வேண்டும். சிலரின் தமிழ் உச்சரிப்பு வருந்தத்தக்கதாகவே உள்ளது. திருத்தப்பட வேண்டியது அவசியம்.ஆங்கிலத்தை எப்படி, இலக்கண சுத்தமாக பேச வேண்டும்; எழுத வேண்டும் என நினைக்கிறோமோ அதுபோல, தமிழ் மொழியையும் பேச வேண்டும். கூட்டங்களில், ஒலிபரப்பு மேடைகளில் தான் இப்படி பேச வேண்டும் என்பதில்லை. எல்லா இடங்களிலும் தமிழை, தமிழாக பேச வேண்டும்.

இலங்கை வானொலிக்கு, 98 வயதாகிறது. இன்னமும் தனித்துவமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்றால், அதன் உச்சரிப்புக்கு இருக்கும் உயிர்ப்பு தான் காரணம். ஒலிபரப்புத் துறையின் ஜாம்பவான்கள் பலர், இலங்கை வானொலியில் இருந்து புகழ் சேர்த்துஉள்ளனர். காலத்தின் தேவைக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களை உள்வாங்கி, நானும் என் ஒலிபரப்பு பயணத்தை தொடர்கிறேன்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X