சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வாய் உளறலாம்; வார்த்தை தவறலாமா?

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 28, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசை அகற்ற, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் படாதபாடு பட்டார். தலையால் தண்ணீர் குடித்தார்; தமிழகம் முழுக்க நடையாய் நடந்தார்; பம்பரமாக சுத்தி வந்தார்; ஜமுக்காளத்தில் அமர்ந்தார்; திண்ணையில் கூழ் குடித்தார்; வயலில் இறங்கி விவசாயிகளிடம் விவாதித்தார்.இத்தனைக்கும்,
வாய் உளறலாம்; வார்த்தை தவறலாமா?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசை அகற்ற, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் படாதபாடு பட்டார். தலையால் தண்ணீர் குடித்தார்;

தமிழகம் முழுக்க நடையாய் நடந்தார்; பம்பரமாக சுத்தி வந்தார்; ஜமுக்காளத்தில் அமர்ந்தார்; திண்ணையில் கூழ் குடித்தார்; வயலில் இறங்கி விவசாயிகளிடம் விவாதித்தார்.இத்தனைக்கும், அ.தி.மு.க., வில் மக்களை ஈர்க்கக் கூடிய வசீகர தலைமையான ஜெயலலிதா இல்லாத சூழல், பத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி எல்லாம் தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும்.ஸ்டாலின், படுத்தபடியே ஜெயித்திருக்க வேண்டும்.

ஆனாலும், அசாத்திய பண பலம், அபாரமான தொண்டர் படை, அதிகார பலம் பொருந்திய அ.தி.மு.க.,வுக்கு மத்திய அரசை ஆளும் பா.ஜ.,வும், வட மாவட்டங்களில் செல்வாக்காக இருந்த பா.ம.க.,வும் கூட்டணியாக அமைந்தது, தி.மு.க.,வுக்கு பீதியை ஏற்படுத்தியது.


வான் மழையாக பொழிந்தார்

எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த கால, தி.மு.க., ஆட்சியில் நடந்த குடும்ப ஆதிக்கமும், மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து போயிருந்தது.இதனால் ஸ்டாலின், 'ரூம் போட்டு' யோசித்தார். '2016 தேர்தலில் சொற்ப இடங்களில், வெற்றியை விரல் இடுக்கில் நழுவ விட்டது போல, இந்த முறையும் விட்டுவிடக் கூடாது சூனா பானா...' என சூதனமாக திட்டமிட்டார்.

உடனே, தன் தந்தையின் அஸ்திரமான இலவசங்களை கையில் எடுத்தார். அர்ஜுனன் அம்புகளாக வாக்குறுதிகளை வான் மழையாக பொழிந்தார்.கூட்டுறவு பயிர்க்கடன்கள் ரத்து; 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அடியோடு ரத்து; மகளிர் சுய உதவிக்குழு கடன்கள்; கல்விக் கடன்கள் ரத்து என, ஏராளமான சலுகைகளை அறிவித்தார்.இதில், 12 ஆயிரத்து சொச்சம் கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்தை, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., அரசே செய்துவிட்டு போய் விட்டது.

இதெல்லாம் போதாது என, 'பெட்ரோல், டீசல் விலையில் 5 ரூபாய் குறைப்போம்; காஸ் விலையில் 100 ரூபாய் கம்மி பண்ணுவோம்; மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் அளிப்போம்; மின் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கு எடுக்கப்படும்' என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசியது தி.மு.க.,'இந்த ஸ்டாலினை நம்புங்கள்; நான் சொல்வதைத் தான் செய்வேன்; செய்வதைத் தான் சொல்வேன்; ஏன் என்றால், நான் கருணாநிதியின் பிள்ளை' எனவும் உறுதியளித்தார்.

இதனால் மக்களும், 'போனால் போகிறது; அவரும் 30 வருஷமா முதல்வர் கனவோட காத்திருக்கிறாரே; கண்டிப்பா செய்வாரு. ஒரு வாய்ப்பு குடுத்து தான் பார்ப்போமே...' என மனம் இளகி, ஸ்டாலினை ஆட்சியில் அமர வைத்துஉள்ளனர்.


உள்ளங்கை நெல்லிக்கனி

ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என்றால் இல்லை. அது பற்றி அமைச்சர்களிடம் கேட்டால், ஆளுக்கு ஒரு சால்ஜாப்பு சொல்கின்றனர்.

ஒரு அமைச்சர், 'சொன்னது உண்மை தாங்க... தேதி சொன்னோமா' என, எடக்கு மடக்காக ஏகடியம் பேசுகிறார்.'நகைக் கடன் ரத்து எப்போது பண்ணுவீங்க?' என கேட்டால், அந்த துறையின் அமைச்சர், 'கல்யாணம் பண்ணியதுமே குழந்தை பிறந்துடுமா...' என கோக்கு மாக்காக குதர்க்கம் பேசுகிறார்.இன்னும் சிலர், 'நாங்க என்ன செய்றது பாஸ்... அ.தி.மு.க.,வினர் கஜானாவை துடைச்சு கவிழ்த்து விட்டு போய் விட்டனர்.

'இது எங்களுக்கு தெரியாதுல்ல. ஏதாச்சும் மிச்சம், மிஞ்சாடி இருக்கும். எடுத்து மக்களுக்கு குடுத்துரலாம்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை. அதான்...' என, நம்பியார் பாணியில் உள்ளங்கைகளை பிசைகின்றனர்.இங்கே தான் மக்களே, ஒரு அரிய உண்மை மறைந்து கிடக்கிறது. ஸ்டாலினும், தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களும், ஒன்றும் அறியாத அப்பாவி அரசியல்வாதிகள் இல்லை.

எல்லாரும் ஆட்சியிலும், கட்சியிலும் பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அனுபவசாலிகள். அதிலும் ஸ்டாலின், எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர் என அரசு நிர்வாகத்தின் பல படிகளிலும், நிர்வாகத்தை திறம்பட கற்று அறிந்தவர். அவரது அமைச்சரவையில் உள்ள பலரும், இதற்கு முன் பலமுறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.இதனால், அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரசின் நிதிநிலை பற்றி நன்கு தெரிந்தே வைத்திருப்பர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் 55 ஆண்டுகளாக மாறி மாறி நடக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், பெரும்பாலான அதிகாரிகள், அ.தி.மு.க., - தி.மு.க., என ஆளுக்கொரு ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.இவர்கள், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சி தலைமைக்கு, அரசு நிர்வாகத்தில் நடக்கும் நல்லது, கெட்டதுகளை அவ்வப்போது தெரிவிக்கவே செய்வர். அந்த வகையில், ஸ்டாலினுக்கும், அவருக்கு தேர்தல் அறிக்கை தயாரித்து கொடுத்த அந்தக் கட்சியின் குழுவினருக்கும், தமிழக அரசின் நிதி நிலை, உள்ளங்கை நெல்லிக்கனியாக நன்றாகவே தெரியும்; தெரிந்திருக்கும்.


'லஞ்ச ஒழிப்பு சோதனை'

அப்படி இருந்தும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஏன் மக்களுக்கு அளிக்க வேண்டும்... 'எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும். அதிகாரத்தை சுவைக்க வேண்டும். 'அதன்மூலம் கிடைக்கும் பலாபலன்களை அடைய வேண்டும்' என்ற ஒற்றை வேட்கையே இதற்கு காரணம்.பெரும்பாலும், தமிழகத்தில் பெண்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால், அவர்களை கவரும் வகையில், மாதாந்திர உதவித்தொகை, காஸ் கட்டணத்தில் 100 ரூபாய் குறைப்பு என்ற துாண்டிலை வீசினர்.

இவ்வளவு வாக்குறுதிகளை அளித்தும், வெற்றி இலக்கான 118 இடங்களை விட ஏழெட்டு இடங்களை மட்டுமே அதிகமாக பிடித்து தி.மு.க., ஆட்சியில் உள்ளது.ஆட்சியில் அமர்ந்த பின், ஸ்டாலினுக்கும், அக்கட்சியினருக்கும் இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சிரமம் என்பது நன்றாகவே தெரியும். இந்த இடத்தில் தான், நம் ஜனநாயகம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.ஒருவர் தேர்தலில் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்து விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரை எதுவும் செய்ய முடியாது.

இது, தனிப்பட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் பொருந்தும். அவர்களிடம், 'கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை' என நாக்கில் பல் போட்டு கேள்வி கேட்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் சரியாக செயல்படாவிட்டால், அவர்களை தகுதியிழப்பு செய்வதற்கோ, திரும்ப அழைத்து கொள்வதற்கோ நம் நாட்டு சட்டங்களில் இடம் இல்லை.ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்க ஒரே வாய்ப்பு, பிரதான எதிர்க்கட்சிகள் மட்டுமே. சரி, மக்களுக்காக எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு, போராட்டம் நடத்தினாலும், அவர்களை அடக்க, 'லஞ்ச ஒழிப்பு சோதனை' என்ற அம்புகளை ஆளும் தரப்பு ஏவி விடும்.

அவர்களும் ஒரு கட்டத்தில், 'நமக்கேன் வம்பு, வாக்குறுதியாச்சு; அவங்களுக்கு ஓட்டு போட்ட மக்களாச்சு. அடுத்த தேர்தல் பிரசாரத்தில் இதை சுட்டிக்காட்டினால் போதும்' என, தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றி கொள்ள, ஒப்புக்கு குரல் கொடுத்து ஒதுங்கி போய் விடுவர்.'தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றி உள்ளதே. அதை பற்றி மட்டும் ஏன் குறிப்பிடுவதில்லை' என, அக்கட்சியின் அடிவருடிகள் சிலர் கேட்கக் கூடும். 10 ரூபாய் இலவச பயணம்ஆம், 'மகளிருக்கு இலவச பஸ் பயணம், கொரோனா நிவாரண நிதி 4,000 ரூபாய் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோமே' என தி.மு.க.,வினரும் மார் தட்டிக் கொள்கின்றனர்.மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயணம் என ஆர்ப்பாட்டமாக அறிவித்து விட்டு, அதற்கென குறிப்பிட்ட சில பஸ்களையே இயக்குகின்றனர்.

எல்லா நகர பஸ்களிலும் இலவச பயணம் கிடையாது என்பது பலரும் அறியாதது. 10 ரூபாய் இலவச பயணத்துக்கு மகளிர், பல மணி நேரம் பஸ் நிறுத்தங்களில் காத்து கிடக்கின்றனர். இதற்கு, 'இலவச பஸ் பயணத்தை தந்திருக்கவே வேண்டாமே' என பல பெண்களும் அரசை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர்.


'ரூபாய்க்கு மூணு படி அரிசி'

அதேபோல, கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய் என்பதும் பழைய கணக்கு தான். அதுவும் ஸ்டாலின் கூறியது தான். அதாவது, போன ஆண்டு, கொரோனா ஊரடங்கை அறிவித்த அ.தி.மு.க., அரசு, ரேஷன் கடைகளில் குடும்பத்துக்கு, தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது. அப்போது ஸ்டாலின், 'இது எப்படி, ஒரு குடும்பத்துக்கு போதும்... ஆகவே, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என அறிக்கை விட்டார். இதையே தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'கடந்த ஆண்டு அ.தி.மு.க., வழங்காத மீதம் 4,000 ரூபாயை நான் ஆட்சிக்கு வந்தால் தருவேன்' என்றார்.

அதன்படி ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்... இவர் பங்குக்கு கொரோனா ஊரடங்கை அறிவித்து, அந்த 4,000த்தை ரெண்டு மாத தவணைகளாக கொடுத்து முடித்து விட்டார். நியாயப்படி, ஊரடங்கால் ஏழைகள் பாதிக்கப்படுவர் என கருதி இருந்தால், பழைய பாக்கி 4,000த்துடன், புதிதாக 5,000 ரூபாயை அல்லவா வழங்கியிருக்க வேண்டும்.

அதை செய்யவில்லையே!மலையளவு வாக்குறுதிகளை வழங்கியவர்கள், அறிவித்த பட்ஜெட்டில், 'பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு; மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் ரத்து' போன்ற ஒரு சில வாக்குறுதிகளை மட்டும், அதாவது மடுவளவு மட்டுமே செய்துள்ளனர். ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில், அவற்றை நிறைவேற்ற, 'வாய்தா' கேட்டுள்ளனர்.'இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது. நாம் வைத்தது தான் சட்டம்' என்பது தான் இவர்கள் எண்ணம்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவது தி.மு.க.,வுக்கு வாடிக்கை தான். அண்ணாதுரை முதன் முதலில் ஆட்சியை பிடித்த 1967 தேர்தலின் போது, 'ரூபாய்க்கு மூணு படி அரிசி' என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.காங்கிரசிடம் இருந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதால், இப்படி அதிரடி வாக்குறுதியை அளித்தார். ஆட்சிக்கு வந்ததும், ஒரு சில இடங்களில் மட்டும் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.


2 ஏக்கர் இலவச நிலம்

அதன்பின், 'மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என வாய் ஜாலத்தால், வாக்குறுதியை துாக்கி வாய்க்காலில் போட்டார்.அடுத்து, 2006ல் கருணாநிதி, 'ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம்' என்ற அதிரடி திட்டத்தை அளித்து ஆட்சிக்கு வந்தார். வந்தபின் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு, 'தமிழகத்தில் அந்த அளவுக்கு நிலமே இல்லை.

'அ.தி.மு.க., சட்டசபையில் தெரிவித்த கொள்கை விளக்க குறிப்பில் இருந்ததை நம்பி ஏமாந்து விட்டேன்' என, அவர்கள் மீது பழிபோட்டு பதுங்கி விட்டார். இப்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க., அரசும் அதே வழியில் தான் நடை போடுகிறது.தி.மு.க.,வினர் எதற்கெடுத்தாலும் திருக்குறளை துணைக்கு அழைப்பர். நாமும் ஒரு குறளுடன் முடிப்போம்...

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்!இதற்கு விளக்கம் தேவையில்லை. தெரியாத தி.மு.க.,வினர், அவர்கள் தலைவர் கருணாநிதி எழுதியுள்ள விளக்க உரையை தேடி படித்து தெளிவு பெறுக!
எஸ். ஜெயசங்கர நாராயணன்
பத்தரிகையாளர் தொடர்புக்கு
இ-மெயில்:
jeyes 1974@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா
31-ஆக-202110:46:59 IST Report Abuse
Stalin Soundarapandian தலைப்பிலேயே, வெறுப்புணர்வைக் காட்டி விட்டீர்கள்.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
29-ஆக-202118:14:54 IST Report Abuse
Elango செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை அதற்குள் விமர்சனம் செய்வது உங்களை போன்றவர்களுக்கு அழகல்ல...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
29-ஆக-202117:17:32 IST Report Abuse
தமிழ்வேள் நன்கு தெரிந்தே வார்த்தை தவறிவிட்டு, வாய் உளறியதாக சொல்லி சமாளிக்கும் திருட்டு திராவிட கூட்டம் ....நாக்குப்புரண்டு பேசுவதற்கு குரூ அண்ணாத்துரை ..அப்புறம் நேற்றுவரை கட்டுமரம் அதன் வளர்ப்புகளும் ....அப்புறம் எப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X